சென்னை: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசுவது குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், துணை தலைவர் கே.என்.நேரு, கொறடா எ.வ.வேலு, திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்பு செயலாளர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
அவையில் திமுக உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து் மு.க.ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தற்போதைய ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் பேசியதாக வெளியான தகவல் வருமாறு:
சட்டப் பேரவையில் சிறந்த எதிர்க்கட்சியாக திமுக செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியை மக்கள் இன்று கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை காக்க 100 சதவீதம் சட்டசபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். திமுக எம்எல்ஏக்கள் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுககாரன் உதவி செய்ய ஓடி வருவான் என்று மக்கள் கூற வேண்டும்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாவிட்டால், திமுக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அவையை புறக்கணித்து வெளியேற வேண்டும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சீனியர் எம்எல்ஏக்கள் மட்டும் பேச வாய்ப்பு வழங்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரில், புதிய எம்எல்ஏக்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும்.
நமது கூட்டணி கட்சி ஆதரவுடன் இந்த ஆட்சி அமைந்திருக்கிறது. வலுவான எதிர்க்கட்சியாக சிறப்பாக செயலாற்ற வேண்டும், ஆளுங்கட்சியை கேள்வி கேட்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளுக்காக கடுமையாக உங்கள் வாதங்களை முன் வைக்க வேண்டும். புதியவர்கள் சீனியர்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கொறடா ஆகியோரை அழைத்து சென்று கோரிக்கை மனு கொடுங்கள். இவ்வாறு அவர் பேசியதாக கூறப்படுகிறது.
