சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சந்தித்தார். ஸ்டெர்லைட் ஆலை திறக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசை கேட்க உள்ள நிலையில், எந்த வகையிலும் ஆலையை திறக்க தடையில்லா சான்றிதழ் வழங்க கூடாது என முதல்வரிடம் வைகோ கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறுகையில், ‘‘என்னுடைய நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து, 6 பாகங்களாகப் புத்தகமாகக் கொண்டு வருகிறோம். வரும் ஆகஸ்ட் 4ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில், தமிழக முதல்வரை கலந்துகொண்டு அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளேன்’’ என்றார்.
உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப் போவதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘‘கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்துக் கோணங்களிலும் விவாதித்து, ஆலோசித்த பின்னரே எங்களது அரசியல் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார்.
