திருவனந்தபுரத்தில் நேற்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் கேரள முதல்வர் வி.டி. சதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் முந்தைய கேரள அரசு கையெழுத்து போட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக ரூ.99 கோடி பெறப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரூ.106 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு பணமும் வாங்கப்பட்டு விட்டதால் இந்த திட்டத்திலிருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்க முடியாது.
ஆனாலும் இந்த பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தொடர ஒன்றிய அரசிடம் கேரள அரசு சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளது. இதன்படி பாடத்திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். இது தவிர எந்தெந்த பள்ளிகளில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை கேரள அரசு தான் முடிவு செய்யும். இந்தத் திட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பாஜ அல்லாத மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுடன் சில பிரச்னைகள் உள்ளன. இது தொடர்பாக அந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைபாடாகும். தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளத்திற்கு பாதுகாப்பு என்பதுதான் இப்போதும் கேரள அரசின் கொள்கையாகும். சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்தபோது பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசினேன். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
