ப்ரோ, அங்கிள் என்று பேசிய விஜய் எங்கே சென்றார்? எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள் திருமாவளவன் வாய் திறக்காதது ஏன்..? நயினார் அடுக்கடுக்கான கேள்வி

நெல்லை: நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2 நாட்களில் மட்டும் 17 கற்பழிப்புகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது ப்ரோ என்றும், அங்கிள் என்றும் பேசிய விஜய் எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை. சூளூரில் 10 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டார். இந்த சம்பவங்கள் எல்லாம் முதலமைச்சர் விஜய்க்கு தெரியுமா? என்பது தெரியவில்லை.

கடந்த வாரத்தில் மட்டும் 40 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதைப் பற்றி வாயே திறக்காமல் முதல்-அமைச்சர் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு வீட்டுக்கு செல்கிறார். இதில் டிபன் பாக்ஸ் கொண்டு வந்து சாப்பாடு சாப்பிடுகிறார். ஆனால் வாயை மட்டும் திறக்க மாட்டேன் என்கிறார். அவர் சந்திப்பது சினிமா பிரபலங்களை மட்டுமே. அவர்களை மட்டும் பார்த்து பேசி படம் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வரும் முன்பே அமமுக எம்எல்ஏவை விலை பேசி வாங்கினர். தொடர்ந்து குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வருகின்றனர்.

தவெகவிற்கு உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது என்பது வேறு. எம்எல்ஏக்களை விலைக்கு பேசி வாங்குவது என்பது தவறான செயல். இதன் மூலமாக இடைத்தேர்தல் நடத்தும்போது, அரசு பணம் வீணாக செலவாகும். இது ஒரு முதிர்ச்சித்தன்மை அற்ற செயல். கரூரில் 10 ரூபாய் பாட்டிலுக்கு பாட்டுப் படித்து நடனமாடிய விஜய் இப்போது அதுபோல் ஆடத் தயாரா? திருமாவளவன் இப்ேபாது நடக்கும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து பேசத் தயாரா? குதிரை பேரம் நடத்தி வரும் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மேலும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து விலை பேசி வாங்கி வருகிறார். இது ரொம்ப நாட்கள் நீடிக்காது. வருங்காலம் பாஜவின் காலமாக இருக்கும். விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி என்பது இல்லை. விஜய், அண்ணாமலை போன்ற நபர்கள் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் பா.ஜ.வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

போதை பொருளை கட்டுப்படுத்த முதலமைச்சர் விஜய் தவறிவிட்டார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை வேறு. காலையில் ஆர்டர் போடுகிறார்கள். மாலையில் அதை நிறுத்தி விடுகிறார்கள். சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் சிவகங்கையில் சிங்கப்பெண் குழுவில் இருந்த பெண் போலீசுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. திமுகவுடன் பா.ஜ. கூட்டணி ஏற்படுமா என்று கேட்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பதில் தெரிவிப்போம். டெல்லியில் நடந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மட்டுமே ஆலோசித்தோம். நீட் வினாத்தாள்கள் பாதுகாப்பு அடிப்படையிலே ஹெலிகாப்டரில் கொண்டு வரப்படுகின்றன.இவர் அவர் தெரிவித்தார்.

ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
‘‘பிரதமர் மோடியின் சாதனைகளை 4 புத்தகங்களாக உருவாக்கியுள்ளோம். நடிகர் ரஜினியை சந்தித்து அதை அளித்துவிட்டு வந்தேன். அவருடன் அரசியல் சம்பந்தமாக எதுவுமே பேசவில்லை. ரஜினி எந்த கட்சியிலும் இல்லை. அவர் எந்த கட்சிக்கும் வர மாட்டார்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: