சென்னை: தவெக கூட்டணியில் சேர வைகோ முடிவு எடுத்துள்ளார். அதற்கு பரிசாக அவருக்கு அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடையநல்லூரில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் மட்டும் ஆட்சியில் பங்கெடுத்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் பங்கெடுக்கவில்லை.
இந்தநிலையில், மதிமுகவும் தவெக கூட்டணிக்கு செல்லும் என்று கூறப்பட்டது. கடந்த சில நாட்களாக தவெக அரசுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசி வந்தார். திருச்சி வந்த முதல்வர் விஜயை, அந்த தொகுதி எம்பி துரைவைகோவும் சந்தித்துப் பேசினார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வைகோவை தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சந்தித்துப் பேசினார். அப்போது, வைகோவும் தவெக கூட்டணிக்கு வரவேண்டும். மதிமுகவைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால், மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும்.
இந்த இடைத்தேர்தலில், கடையநல்லூர் தொகுதியில் வைகோ போட்டியிட வேண்டும். முன்னதாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்க தயாராக இருப்பதாக தவெக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தவெக கூட்டணியில் மதிமுக சேரும் என்று வாக்குறுதி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்களா என்ற சந்தேகமும் அரசியல் பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.
