சென்னை: தயவு செய்து உங்கள் ஆட்சி பற்றிய செய்திகளை படியுங்கள். அதை படித்தாவது தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அக்கிரமங்கள் மீது நடவடிக்கை எடுங்கள், என்று ஆற்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் முதல்வர் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
திமுக முன்னாள் பொருளாளரும், உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினருமான ஆற்காடு வீராசாமி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக அயலக அணி தலைவருமான கலாநிதி வீராசாமி இல்ல திருமண விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆர்க்காடு வீராசாமி தொடக்க காலத்தில் மின் துறையில் ஒரு ஊழியராக பணியாற்றி, அதற்கு பிறகு அந்த மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அளவிற்கு உயர்ந்து, இந்த இயக்கத்திற்கு பெருமை சேர்த்தவர். தற்போது, அவரது மகன் நமது இயக்கத்திற்கு வலு சேர்த்து வருகிறார். 1976ல் நாங்கள் எல்லாம் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்த போது ஆர்க்காட்டார் எங்களோடு இருந்தார். இன்றைக்கும் என்னுடைய கையில் மிசா தழும்பு இருக்கிறது. அதேபோன்று அவருக்கு இன்றைக்கும் ஒரு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்கு பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. ஆனால் 75 ஆண்டு காலம் கொண்ட கொள்கைக்காக லட்சியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடும் கட்சி திமுக. சோசியல் மீடியா இன்றைக்கு எந்த அளவுக்கு பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். சமீப காலமாக, முதல்வர் ‘கோட்’ போட்டு வந்தார், கையில் டிபன் கேரியர் எடுத்து வந்தார், வாட்ச் கட்டி வந்தார், செஸ் விளையாடினார், இன்றைக்கு பட்டு சட்டை, வேஷ்டியில் வந்தார். இதெல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருந்தன.
தற்போது, அவைகள் எல்லாம் மறைந்து, நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவரை பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படியுங்கள். படித்து, அதில் இருக்கும் உண்மையை கண்டறிந்து, அதற்குரிய நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தொலைந்த என் சிரிப்பை மீட்டவர் மு.க.ஸ்டாலின்
திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,‘‘ இந்த மன்றத்தில் நான் பொதுக்குழுவில் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது. இங்கு நடந்த பொதுக்குழுவில் பங்கேற்ற போது தான் என்னை தண்ணீர் பாட்டில் கொண்டு வீசி வெளியேற்றினார்கள். இந்த மன்றத்தில் வைத்து எனது சிரிப்பு தொலைந்து போனது. இதே மன்றத்தில் இன்றைக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்று நிற்கிறேன். எப்போது நான் திமுக தலைமையை ஏற்றேனோ, அன்றைக்கே தொலைந்து போன எனது சிரிப்பு வந்துவிட்டது. இதனை மீட்டு தந்தவர் தலைவர் ஸ்டாலின் தான். அண்ணா எப்படியோ அதே போன்று தான் தலைவர் மு.க.ஸ்டாலினும், எல்லாரையும் அரவணைத்து செல்கிறார். ஏதோ ஒரு பிம்பத்தை பார்த்து மக்கள் ஆட்சியை தேர்ந்தெடுத்துவிட்டார்கள். ஒரு மாத ஆட்சியை பார்த்து ஏதோ இழந்துவிட்டோமோ என்று மக்கள் நினைக்கிறார்கள்,’’ என்றார்.
இன்றைய அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசுவதில்லை: கனிமொழி
திருமண விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசுகையில், ‘‘ இன்றைக்கு பல அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசுவது கிடையாது. இவர்கள் என்றைக்கு பேசுவார்களோ என்று காத்திருக்க வேண்டிய ஒரு நிலை இருக்கிறது. எதற்கும் பேசுறதும் இல்லை, பதிலும் இல்லை. அப்படி பேசினாலும் பேசாமலேயே இருந்திருக்கலாம் என நினைக்கும் அளவிற்கு இருக்கிறது.
ஆனால், அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களை பார்க்கக்கூடிய நேரத்தில், நம்முடைய கலாநிதி நாடாளுமன்றத்தில் ஒரு சப்ஜெக்ட் இருந்தும், யாரும் பேசுறதுக்கு முன்வரவில்லை என்றால் கடைசி நிமிஷமாக இருந்தாலும் கூட கொஞ்சம் பேசுறீங்களான்னு கேட்டால்? எதை பற்றியாக இருந்தாலும் இந்த உலகத்தில எல்லா சப்ஜெக்ட்லையும் பேசக்கூடிய ஒரு வல்லுனராக இருக்கக்கூடியவர். எந்த தலைப்பாக இருந்தாலும், திமுக கொள்கைகளை கருத்துக்களை அங்கே வலிமையாக பேசுவார்’’ என்றார்.
