பிபா உலக கோப்பை; முதல் போட்டியில் மெக்சிகோ வெற்றி: 2-0 என தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது

 

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழா, மெக்சிகோ சிட்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்டெகா மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்த நிலையில், உலகக்கோப்பை வரலாறு, போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கலாச்சாரம் மற்றும் கால்பந்தின் பெருமையை எடுத்துரைக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தொடக்க விழாவில் உலகப் புகழ்பெற்ற பாடகர்கள் ஷகீரா, பர்னா பாய் உள்ளிட்டோர் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் வாயிலாக நிகழ்ச்சியை நேரலையில் கண்டு ரசித்தனர். 48 அணிகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழா அடுத்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூன்று நாடுகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில், சொந்த மண்ணில் விளையாடிய மெக்சிகோ அணி வெற்றியுடன் தனது உலகக்கோப்பை பயணத்தை தொடங்கியது. உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்ட மெக்சிகோ அணி, ஆயிரக்கணக்கான ரசிகர்களின் உற்சாக ஆதரவுடன் களமிறங்கியது.

ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ வீரர்கள், அட்டாக்கிங்கை கையாண்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்சிகோவின் ஜூலியன் கினோனெஸ் 9வது நிமிடத்திலும், ரவுல் ஜிமெனெஸ் 67வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். அதன் பலனாக 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய மெக்சிகோ அணி, உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியிலேயே முக்கியமான 3 புள்ளிகளைப் பெற்ற மெக்சிகோ அணி, தனது ரசிகர்களுக்கு உற்சாகமான தொடக்கத்தை வழங்கியுள்ளது.

செக்கியாவை வீழ்த்தி தென் கொரியா வெற்றி
மெக்ஸிகோ குவாதலஜாரா மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் தென் கொரியா மற்றும் செக்கியா அணிகள் மோதின. போட்டியின் 58வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், 59வது நிமிடத்தில் செக்கியாவின் லேடிஸ்லேவ் ரெஜ்சி கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போட்டியின் 67வது நிமிடத்தில் தென் கொரியாவின் வாங்க்-இன்-பியோம், லீ காங்கின் உதவியுடன் கோலை வசப்படுத்தினார். 80வது நிமிடத்தில் தென் கொரியாவின் ஓ ஹியொங் க்யூ கோல் அடித்து அசத்த தென் கொரியா முன்னிலை பெற்றது. அதன் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காத நிலையில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related Stories: