மகளிர் டி 20 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நாளை துவக்கம்; 12 அணிகள் பங்கேற்பு: இந்தியா – பாக். 14ம் தேதி மோதல்

பர்மிங்ஹாம்: மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நாளை (12ம் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. லண்டன், பர்மிங்ஹாம், மான்செஸ்டர், லீட்ஸ், பிரீஸ்டல், சவுத்தாம்ப்டன் நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. குருப் ஏவில் இந்தியா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்துஅணிகளும், குரூப் பியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் நேபாளத்தில் நடந்த தகுதிச்சுற்று போட்டிகள் மூலம் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.
ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையோன போட்டி வரும் 14ம் தேதி நடக்கிறது.

முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை சந்திக்கும் இந்திய அணி, 17ம்தேதி ஹெட்டிங்லியில் நெதர்லாந்துடனும், 21ம் தேதி ஓல்ட் டிராபோர்ட்டில் தென்னாப்பிரிக்காவையும், 25ம் தேதி வங்கதேசத்தையும், 28ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது. இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 30, ஜூலை 2ம் தேதியும் இறுதிப் போட்டி ஜூலை 5ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும் நடக்கிறது.

கடந்த 2024ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து நடப்பு சாம்பியனாக உள்ளது. இந்த தொடரில் 6 முறை பட்டம் வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ள நிலையில் 50 ஓவர் போட்டிகளில் உலக சாம்பியனான இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது. இது அவரது 10வது உலகக்கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்தது. மொத்த பரிசுத் தொகை ரூ.82 கோடியாகும். இது 2024-ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 10 சதவீதம் அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.21.8 கோடி வழங்கப்படும்.

2-வது இடம் பிடிக்கும் அணி ரூ.10 கோடியை பெறும். அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.6.29 கோடி வழங்கப்படும். லீக் சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.29 லட்சம் வழங்கப்படும். டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் ரூ.2.06 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Related Stories: