ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்;பவுலிங்கில் பும்ரா தொடர்ந்து நம்பர்1: சக வீரரிடம் முதலிடத்தை இழந்த ஜோ ரூட்

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் 1, 8 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை இழந்ததுடன், 2 இடங்கள் சரிந்து 851 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோ ரூட்டின் இந்த சரிவால், நியூசிலாந்துடனான டெஸ்டின் முதல் இன்னிங்சில் 56 ரன்கள் எடுத்தவரும், இங்கிலாந்தின் ஒரு நாள், டி20 கிரிக்கெட் அணி கேப்டனுமான ஹாரி புரூக் 869 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார்.ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 853 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஸ்டீவன் ஸ்மித் 831 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இலங்கையின் காமின்டு மென்டிஸ் 781 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் விளாசிய சுப்மன் கில் 126 ரன்களும், கே.எல்.ராகுல் 100 ரன்களும் எடுத்தனர். கில் அடித்த சதத்தால் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 733 புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 9வது இடத்தில் உள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இந்த போட்டியில் 81 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒரு இடம் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார்.

பவுலிங்கில் இந்திய அணியின் ஜஸ்ரித் பும்ரா மாற்றமில்லாமல் 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 2வது இடம், பேட் கம்மின்ஸ் 3வது இடம், ஸ்காட் போலன்ட் 5வது இடம், தென் ஆப்ரிக்காவின் மார்கோ ஜான்சன் 4வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆப்கனுடன் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் முன்னேறி 14வது இடத்தை முகமது சிராஜுடன் குல்தீப் யாதவ் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரசித் கிருஷ்ணா 9 இடங்கள் முன்னேறி 51வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆப்கனுக்கு எதிரான டெஸ்டில் விளையாடாத போதிலும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆப்கனுடனான டெஸ்டில் 52 ரன்கள், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய வாஷிங்டன் சுந்தர் முதல்முறையாக டாப் 10ல் நுழைந்து சாதனை படைத்துள்ளார். அவர் 244 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறார். அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இந்தியா முதல் 3 இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: