எனக்கு காயமா? வலைப்பயிற்சியில் பின்னி பெடலெடுத்த ரோகித்

 

மொகாலி: இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் மொகாலியில் உள்ள ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ், ஹர்ஷ் துபே போன்ற இளம் வீரர்களுடன்,ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற பல முன்னணி வீரர்கள் இருந்தபோதும், அனைவரது பார்வையும் ரோகித் சர்மா மீதே இருந்தது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், ஒருநாள் தொடரில் மட்டும் பங்கேற்று வருவதால் அவரது பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்தநிலையில் உடற்தகுதி குறித்த அனைவரின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நட்சத்திர வீரர் ரோகித் சர்மா முழு வீச்சில் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். பயிற்சியின் துவக்கத்தில் உடற்பயிற்சி நிபுணர் அட்ரியன் லீ ரூக்ஸ் மேற்பார்வையில் ரோகித் சர்மா தனது உடற்பயிற்சிகளை துவங்கினார். சக வீரர் இஷான் கிஷன் உடன் இணைந்து அவர் 5 முறை சிறிய அளவிலான ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது அவருக்கு எந்த ஒரு உடல் சோர்வும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படையாகவே காண முடிந்தது. இதன்பின் முழு பேட்டிங் கவசங்களுடன் வலைப்பயிற்சிக்கு வந்த அவரை, அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் உன்னிப்பாக கவனித்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்ததால் ஆரம்பத்தில் சற்று தடுமாறிய அவர், பவுண்டரிகளை விளாசுவதை விட பந்துகளை கணித்து ஆடவே முயற்சித்தார். இளம் வேகம் நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவரது இயல்பான ஆட்டம் திரும்பியது. பந்துகளை வலுக்கட்டாயமாக அடிக்காமல், பேட்டிங் லயத்திற்கு ஏற்ப நிதானமாக விளையாடினார். சுமார் 20 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் ரோகித் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர் தனக்கான இலக்கை தானே நிர்ணயித்து விளையாடி வருகிறார். ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் ஒரு சதமாவது அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

Related Stories: