பிபா உலககோப்பை கால்பந்து; பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நள்ளிரவு தொடக்கம்

நியூயார்க்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. அதன்படி 23வது தொடர் இன்று நள்ளிரவு தொடங்குகிறது. இந்த போட்டிகள் ஜூலை மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 48 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. லீக் சுற்று போட்டிகள் ஜூன் மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகின்றன. அணிகள் அனைத்தும் 12 குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் இடம்பெறும். அந்த அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும். இதன் முடிவில் மொத்தம் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளும், சம நிலையில் (டிரா) முடிந்தால் தலா 1 புள்ளியும் வழங்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அத்துடன் மூன்றாவது இடம் பிடிக்கும் சிறந்த 8 அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். அதன்பிறகு நாக்-அவுட் சுற்றுகள் தொடங்கும். ஜூன் மாதம் 28ம் தேதி முதல் ஜூலை மாதம் 3ம் தேதி வரை நடக்கும் நாக் அவுட் சுற்றில் 32 அணிகள் மோதும். தொடர்ந்து ஜூலை 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை 16 அணிகள் போட்டியிடும். அதன்பின்னர் காலிறுதிப் போட்டிகள் ஜூலை 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையும், அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 14ம் தேதி மற்றும் 15ம் தேதி நடைபெறுகின்றன. 3வது இடத்திற்கான போட்டி ஜூலை 18-ம் தேதியும், இறுதிப்போட்டி ஜூலை 19ம் தேதியும் நடைபெறுகிறது. தொடக்கப் போட்டிகள் வட அமெரிக்காவில் நடைபெறுகின்றன.

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் மெக்சிகோ அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மெக்ஸிகோ சிட்டி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் தென் கொரியா அணியும், செக் குடியரசு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி எஸ்டாடியோ குவாடலஜாரா மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் வட அமெரிக்கா முழுவதும் நடத்தப்படுவதால், பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைபெறுகின்றன. மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்துவதால், 2026 பிபா உலகக் கோப்பையின் 3 தொடக்க விழாக்கள் பாடகர், பாடகிகளின் இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு தொடக்க விழாவும், அந்தந்த நாட்டின் முதல் போட்டி தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகத் தொடங்குகின்றன. அதாவது இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு மெக்சிகோ மைதானத்திலும், நாளை இரவு 11 மணிக்கு டொராண்டோ மைதானத்திலும், நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சோபி மைதானத்திலும் தொடக்க விழாக்கள் நடக்கின்றன. ஒரு பொதுவான மைய கருத்துடன் இந்த விழாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. அமெரிக்கா தனது முதல் போட்டியை இந்திய நேரப்படி 13ம் தேதி காலை 6:30 மணி விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஜி நெட்வோர்க் புதியதாக தொடங்கி உள்ள யூனைட் 8 ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம்.

 

Related Stories: