சென்னை: தீபம் ஏற்றுவதை தடுக்கும் எண்ணத்தை விட முதலில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, துறை முறைகேடுகளை களைய அக்கறை காட்டுங்கள் என்று அமைச்சர் நிர்மல் குமாருக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சமூக வலைதள பதிவில், ‘தமிழக மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மதுரையில் அளித்த பேட்டியை வன்மையாக கண்டிக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவதை ஏதோ அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை போல உருவகப்படுத்தி, 2 ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலைமை இருந்ததோ அதைத்தான் கடைப்பிடிப்போம் என்று சொல்கிறாரே.
திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது. ஏதோ நீங்கள் எல்லாம் அவசர காலத்தில் அடித்த விசில் சத்தத்தில் வெற்றி பெற்று விட்டீர்கள். அதனால் உரிமைக்காக போராடும் மக்களின் உரத்த குரல் உங்கள் காதில் விழாது. அதுமட்டுமல்ல அமைச்சரின் பேட்டி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையோ வழக்கத்தையும் மதித்ததாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல மக்களுக்கு வேண்டியவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கும் பொழுது எல்லா தலைவர்களும் பேட்டி கொடுக்கும் முறையை கையாளுகிறார்கள். ஆனால் அந்த முறையையும் மின்சார அமைச்சர் கொச்சைப்படுத்துகிறார். இன்றைய தொழில்நுட்ப முறைகளினால் தங்கள் வெற்றியைப் பெற்று விட்டு சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகை அறிக்கைகள் தான் இருந்தது, இந்த ஊடகங்கள் எல்லாம் தேவையில்லை என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.
ஆக தமிழக முதல்வர் விஜய் கட்சி சார்ந்த அமைச்சர்கள் யாரும் தங்கள் துறையில் உள்ள பிரச்சனைகளை பார்க்காமல் சரியாக அணுகாமல், தமிழகத்தின் உணர்வு பூர்வமான பிரச்னைகளை மேம்போக்காக அணுகி பேட்டிகள் கொடுப்பது அவர்களுக்கு தமிழக மக்களின் மீது அக்கறையின்மையே காண்பிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடுக்கும் எண்ணத்தை விட முதலில் தமிழகத்தின் நிலவும் மின்வெட்டையும் அந்த துறையில் உள்ள முறைகேடுகளையும் களைவதில் அமைச்சர் அக்கறை செலுத்தினால் நலமாக இருக்கும். விளக்கேற்றுவோம் ஒளி வேண்டும் என்கிறார்கள் மக்கள். மின்வெட்டு ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டாக்குவோம் என்கிறார் அமைச்சர்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
