கூட்டணிக்குள் குழப்பம் வந்து விட்டது தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

சேலம்: தவெக கூட்டணிக்குள் குழப்பம் வந்து விட்டது, அதனால் எப்போது வேண்டுமானாலும் தவெக ஆட்சி கவிழும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் இடைப்பாடி பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை, அதிமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
ஆட்சிக்கு வந்துள்ள தவெக, பெரும்பான்மை பெறவில்லை. 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. பல கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. நாற்காலிக்கு 4 கால்கள். அதில் 2 கால்கள், திமுக கூட்டணியில் இருந்தவர்களிடம் இருந்து இரவல் வாங்கப்பட்டுள்ளது. அந்த கால்கள் எப்போது வேண்டுமானாலும் நகரும். அப்படி நகரும்போது நாற்காலி சாயும். அப்படிப்பட்ட நிலையில் தான், தவெக ஆட்சி நடக்கிறது.

திமுக கூட்டணியில் வென்ற கட்சிகள் முட்டுக்கொடுத்து, இந்த ஆட்சியை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் நடத்தியுள்ளார். அதில், 436 திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அது என்னென்ன திட்டம் என்று இதுவரை அறிவிக்கவில்லை. அந்த திட்டங்களை நிறைவேற்ற நிதி எவ்வளவு ஒதுக்கீடு எனவும் குறிப்பிடவில்லை. எல்லாம் வெற்று அறிவிப்பாக, மக்களை ஏமாற்றும் அரசாக செயல்படுகிறார்கள்.

கவர்ச்சிக்கரமான திட்டங்களை கூறி, மக்களிடம் ஆசைவார்த்தை பேசி தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது. எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை என மக்களே சொல்கிறார்கள். ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு தவெக, தனது கூட்டணி கட்சிகளிடம் எல்லாம் கேட்காமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த சீட்டிற்கான வேட்பாளரும், கூட்டணிக்கு புது பெயராக தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என வலைதளத்தில் கூறியுள்ளார். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விசிகவோ அப்படி ஏதும் தெரியவில்லை எனக்கூறியுள்ளது. இப்படி கூட்டணிக்குள் குழப்பம் வந்துவிட்டது. அதனால், எத்தனை நாள் ஆட்சி நீடிக்கும் எனத்தெரியவில்லை.

நேர்மையான அதிகாரிகளை நியமித்துவிட்டதாக முதல்வர் கூறியுள்ளார். அதே அதிகாரிகள் தான், திமுக, அதிமுக ஆட்சியிலும் இருந்தார்கள். புதிய அதிகாரிகளை தேர்வு செய்து தவெக நியமிக்கவில்லை. ஆட்சி என்பது முதல்வர் வழிகாட்டுதல்படி தான் நடக்கும். அதிகாரிகள் வந்துவிட்டார்கள் என்றால், அவர்களே ஆட்சியை நடத்துவார்களா?, அப்படியென்றால் முதல்வர் எதற்கு? என மக்கள் கேட்கிறார்கள். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, பலாத்காரம், திருட்டு எல்லா இடங்களிலும் நடக்கிறது. அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. திருச்சி கூட்டத்தில் தவெக தலைவர் பேசும்போது, அதிமுகவை தீர்ந்து போன கட்சி என்றும், மற்றும் சிலர் என பேசியுள்ளார். அதிமுக தீர்ந்துபோன கட்சி அல்ல, மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் கட்சி. தவெக ஆட்சிக்கு வந்ததும் தலை, கால் புரியாமல் ஆடக்கூடாது. பதவி வரும்போது பணிவு வர வேண்டும்.

தவெக பொதுப்பணித்துறை அமைச்சர், பல கட்சிகளில் இருந்தவர். முதலில் திமுக, பிறகு விசிக, தற்போது தவெக. அடுத்து எந்த கட்சிக்கு போவார் எனத்தெரியவில்லை. நான் அதிமுகவில் 1974ல் கிளைக்கழக செயலாளராக இருந்தவன். தற்போது 51 ஆண்டுகளாக இருக்கிறேன். உண்மையாக மக்களுக்கு உழைக்கிறேன். எந்த கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக என்றைக்கும் மக்களுக்கான கட்சியாக இருக்கும். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

குதிரை பேரத்தில் ராஜினாமா செய்த 4 பேரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தவெக குதிரை பேரத்தில் 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அங்கு போய் சேர்ந்துள்ளார்கள். வாக்காளர்கள் கையில் வைத்த மை அழிவதற்குள் இந்த மாற்றத்தை செய்துள்ளார்கள். இந்த 4 பேரையும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது. வாக்களித்தவர்களுக்கு துரோகம் செய்த 4 பேரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது. அதிமுக ஆட்சியின்போது, அமைச்சர்களாக பதவி சுகத்தை அனுபவித்தவர்கன், மாற்றுக்கட்சிக்கு போயிருக்கிறார்கள். உண்மை தொண்டர் மகேந்திரன், கட்சியை முடக்க பார்ப்பதை பார்த்து தன்னை அழித்துக் கொண்டார். உணர்வுபூர்வமான தொண்டர்கள் ஒருவரும் வெளியில் செல்லவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories: