பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணையலாம் அண்ணாமலையை நம்பி யாரும் போகாதீங்க…! பாஜ தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் அட்வைஸ்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
அண்ணாமலை ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருப்பதாக தொலைக்காட்சி மூலம் அறிந்து கொண்டேன். அதில் ஒரு சில பாஜ பொறுப்பாளர்கள் இணைந்துள்ளனர். அதோடு அடிமட்ட பொறுப்பாளர்களும் அங்கு சென்றுள்ளனர். பிரதமர் மோடியின் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளோம். இது ஓர் இயக்கம் தான் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களை மூளை சலவை செய்துள்ளனர். பாஜவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பியதாகத்தான் வரலாறு உள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் ஆசீர்வாதம் எந்த இயக்கத்துக்கும் கிடையாது. பாஜ ஒரே நாடு, ஒரே தேசம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. பாஜ தொண்டர்கள் எதையும் நம்பி, எங்கும் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அந்த இயக்கத்திலும் இருந்து கொண்டு, பாஜவிலும் இருக்கலாம் எனச் சொல்வார்கள். ஆனால் அப்படி இருக்க முடியாது. பாஜ உலகிலேயே மிகப் பெரிய கட்சி. உலகத் தலைவர்கள் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் பங்கேற்ற அனைத்து மேடைகளிலும் முன்னிருந்து நிகழ்ச்சிகளை நடத்தியவர் அண்ணாமலை. கடந்த பொதுத் தேர்தலில் கூட தனி விமானம் மூலம் 100 தொகுதிகளில் பிரசாரம் செய்தது அண்ணாமலை தான். அவருக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருந்திருந்தால் அன்றைக்கே சொல்லி இருக்கலாம். ஆனால், இப்போது இது குறித்து சொல்வது சரியாக இருக்காது.

பாஜவில் இருந்து ஒரு சிலர் அண்ணாமலையின் இயக்கத்துக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அங்கு சென்று இருக்கலாம். அவர்கள் மீண்டும் பாஜவில் இணைய வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். பாஜ பலமாகத்தான் இருக்கிறது. பலவீனமாக இருக்கிறது என யார் சொன்னார்கள். அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்னை. அது குறித்து நான் பேச முடியாது. இதே கூட்டணியோடு சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பாஜ போட்டியிடும். அண்ணாமலையோடு எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஜூன் 4 அன்று கூட அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

கட்சிக்கு துரோகம்
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாஜவின் உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ இருந்து கொண்டு, அரசியல் சார்ந்த, அரசியலில் ஈடுபட விருப்பமுள்ள இதர அமைப்புகளுடனும் தொடர்பில் இருத்தல் அல்லது அந்த அமைப்புகளின் உறுப்பினராதல் என்பது நாம் நமது கட்சிக்கு செய்யும் துரோகமாகும். பிரதமர் மோடி, அரசியலை முன்னெடுக்கும் வேறெந்த இயக்கத்திற்கும் ஆதரவோ, ஆசியோ வழங்கவில்லை. நமது தொண்டர்களும், நிர்வாகிகளும் பாஜ தவிர அரசியலை மையமாக வைத்து நடக்கும் இதர அமைப்புகளின் உறுப்பினராகவோ, ஆதரவாளராகவோ இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படி இருந்தால் அது கட்சி விதிமீறலாக கருதப்படும், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: