மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:
விஜய் அண்ணா… இதுவரை தலைமை பண்பை சினிமாவில் மட்டும்தான் காட்டியிருக்கிறீர்கள். நிஜத்தில் காட்டியதாக தெரியவில்லை. முதல்வர் பதவியை ஏற்று ஒரு மாதத்திலும் விஜய் அண்ணாவின் ஆளுமை பண்பு முழுமையாக வெளிப்பட்டதாக தெரியவில்லை. சென்னையிலே அவர் பதவியேற்றபோதும், திருச்சியில் நன்றி அறிவித்த போதும், அமைச்சரவை கூட்டத்தின் செய்தியிலும், வெறும் நாடகத்தன்மை தான் இருக்கிறது.
விஜய் அண்ணாவின் பதவி பிரமாணம், நன்றி அறிவித்தல், தலைமைச் செயலகம் வருவது, கை காட்டுவதை பார்க்கும்போது, அமைதிப்படை திரைப்படத்தை தான் நாம் நினைவுக்கு கொண்டு வர வேண்டி இருக்கிறது. சினிமா கதாநாயகனை, உண்மை கதாநாயகனாக நினைத்து இளையோர் கூட்டம் பின்னால் வருகிறது. அந்த இளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்னாகுமோ? நிர்வாகம் என்பது சினிமா வசனம் பேசும் வேலையல்ல என்பது விஜய் அண்ணாவுக்கு தெரிய வந்திருக்கும். மொத்தத்தில் மிளகாய் பொடியை போட்டு பாயசத்தை இனிக்க வைப்பேன் என்று சொன்னால் எப்படியோ, அப்படித்தான் இருக்கிறது விஜய் அண்ணாவின் ஒவ்வொரு அறிவிப்பும்.
