‘‘சட்டமன்றம் படப்பிடிப்பு தளம் கிடையாது’’ மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் விஜய்: கோவி.செழியன் கேள்வி

பெரம்பூர்: மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள் விஜய் என்று முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் கேள்வி எழுப்பினார். சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக. நகர் வடக்கு பகுதி திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்க நிகழ்ச்சி பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் கோவி.செழியன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, மேயர் பிரியா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, வட்ட செயலாளர் புஷ்பராஜ், கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில், கோவி.செழியன் பேசியதாவது; தேர்தலுக்கு பிறகு திருச்சியில் மக்களை சந்தித்து அங்கேயும் திமுகவா, தவெக என வெறுப்பை பேசி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் அவர்களே தவெகவினர் முதலில் ஆதரவு கேட்டபோது ஸ்டாலின் சாரிடம் கேளுங்கள் என சொன்னீர்கள் இரண்டாவது கண்டுகொள்ளாமல் அமைச்சர் பதவிக்காக ஒட்டிக்கொண்டீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றி திமுக தொண்டனுடைய உழைப்பு, எங்கள் தலைவருடைய வியர்வை. திமுக கூட்டணி தயவால் நாற்காலியில் உட்கார மாட்டேன் என நீங்கள் சொல்லி இருந்தால் அரசியலில் நேர்மை இருக்கிறது என சொல்லலாம்.

வெள்ளை அறிக்கை முதன்முதலில் செய்தது திமுக. வரலாறு தெரியவில்லை என்றால் செங்கோட்டையனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சட்டமன்றம் என்பது சூட்டிங் ஸ்பாட் அல்ல. அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் அமர்ந்த இடம். இதுவரை சட்டமன்றத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பது தான் மரபு. வீட்டிற்கு சென்று பதில் அளிப்பது கேடு கெட்ட கலாச்சாரம்.

பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என கட்சி தொடங்கிய விஜய், ஆளுநர் மாளிகையில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை கண்டிக்க உங்களுக்கு துணிவு இருக்கிறதா? நீங்கள் கூறிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்ற போகிறீர்கள் என மக்கள் கேட்கிறார்கள். ஆட்சி அமைத்து இதுவரை ஒரு புதிய திட்டத்துக்கு புள்ளி வைத்திருப்பாரா என மக்கள் கேள்வி கேட்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இது ஆட்சியா அல்லது காட்சியா? என நினைக்கிறார்கள். இவ்வாறு பேசினார்.

Related Stories: