சென்னை: நம்முடைய தயவோடு நடைபெறும் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி எடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் தலைமையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
75 ஆண்டு காலம் தன்னுடைய லட்சிய பயணத்தை தொடர்ந்து நடத்தி, பவள விழா கொண்டாடி இருக்கும் திமுகவிற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல, ஒரு முறை அல்ல, 6 முறை தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திய திமுகவில் தங்களை இணைத்துக் கொள்ள வந்திருக்கிறீர்கள். நவீன தமிழ்நாட்டை உருவாக்கி தந்திருக்கும் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அண்ணா அறிவாலயத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். எப்போதுமே ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்திற்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வசதியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இன்றைக்கு திமுக ஆளுங்கட்சி அல்ல; ஆளுங்கட்சியாக இருந்து, இப்போது எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், பதவிக்காக நீங்கள் வரவில்லை, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் வரவில்லை. பணியாற்ற வேண்டும், இந்த இயக்கத்திற்குத் துணை நிற்க வேண்டும், தமிழ் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறீர்கள். இங்கு நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார், நான் பல ஆண்டு காலம் அதிமுகவிற்குப் பணியாற்றி இருக்கிறேன்; இரண்டு முறை தேர்தல் களத்தில் ஈடுபட்டு இருக்கிறேன்; இருந்தாலும், அந்த இயக்கத்தில் இருந்தபோது நான் விசுவாசமாகப் பணியாற்றி இருக்கிறேன் என்பதை வெளிப்படையாக அவர் எடுத்துச் சொன்னார்.
நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். எப்போதுமே ஒருவன், ஒரு தொண்டனாக இருந்தாலும் சரி, ஒரு செயல் வீரனாக இருந்தாலும் சரி, தளபதியாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி, தான் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருந்திட வேண்டும். எனவே, நிச்சயமாக திமுகவில் இணைந்திருக்கும் கஜேந்திரன், நிச்சயமாக திமுகவிற்கு விசுவாசமாக இருந்து பணியாற்ற இருக்கிறார் என்பதை இதன் மூலமாக அறிந்து கொள்கிறேன். அவர் மட்டுமல்ல, இங்கு வந்திருக்கும் நீங்களும் அப்படித்தான் இருக்கப் போகிறீர்கள். திமுகவினுடைய வரலாறு என்பது, 1949ல் தொடங்கி, அதற்கு பிறகு நடைபெற்ற 1952ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னாலும், 1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்குப் பிறகு, 1962ல் தேர்தல் களத்தில் ஈடுபட்டு, நாம் எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெறும் அளவிற்கு 50 இடங்களில் அன்றைக்கு வெற்றி பெற்றோம். அதற்குப் பின்னால் 1967ல் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம்.
அண்ணா மறைவிற்கு பிறகு, கலைஞர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். அதற்கு பிறகு 1971ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றோம். 1971ல் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் இருந்த நேரத்தில்தான், 1975ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அதை நாம் எதிர்த்தோம். அவ்வாறு எதிர்த்தால் ஆட்சி பறிபோகும் என்பதைத் தெரிந்தே எதிர்த்தோம். நாம் கவலைப்படவில்லை. கலைஞர் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஆட்சி நமக்கு முக்கியமல்ல, ஜனநாயகம் தான் நமக்கு முக்கியம் என்று கருதி, அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து, சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, தீர்மானம் போட்டு அன்றைக்கு நிறைவேற்றினார். நெருக்கடி நிலையை ரத்து செய்யுங்கள்; கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யுங்கள் என்று தீர்மானம் போட்டார்.
அந்தத் தீர்மானம் போட்ட காரணத்தால், 1976ம் ஆண்டு நம்முடைய ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 13 ஆண்டு காலம் நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை. மீண்டும் 1989ல் ஆட்சிக்கு வந்தோம். 1991ல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு திமுக துணை நிற்கிறது என்ற ஒரு பிரசாரத்தை நடத்தி, அதற்காக நம்முடைய ஆட்சியை கலைத்தார்கள். அதற்கு பிறகு 1996ல் நாம் ஆட்சிக்கு வந்தோம். பிறகு 2001ல் நடைபெற்ற தேர்தலில் தோற்றோம். 2006ல் ஆட்சிக்கு வந்தோம். 2011ல் தோற்றோம். பிறகு 2021ல் ஆட்சிக்கு வந்தோம். இதை எதற்காக நான் சொல்கிறேன் என்று சொன்னால், வெற்றி, தோல்வி என்பது நம்மைப் பொறுத்தவரையில் மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன்தான் திமுககாரன் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் தான், இன்றைக்கு வெற்றி வாய்ப்பை நாம் இழந்திருந்தாலும், ஆட்சிப் பொறுப்பை நாம் இழந்திருந்தாலும், எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள், நாங்கள் வருகிறபோது, எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடத்தில் சொல்லிவிட்டு தான் வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லிவிட்டுச் செல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், நீங்கள் செல்லுங்கள்; உங்களுடைய விருப்பம்; உங்களுக்கு இருக்கும் ஜனநாயகம்; நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது; அதன் மூலமாக பாஜ ஆட்சி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அவர்களை நான் வழியனுப்பி வைத்தேன். எனவே, நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் எம்எல்ஏக்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
