திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்படும் நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்தது. இந்நிலையில் கலப்பட நெய் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் 15 இடங்களில் நேற்று சோதனைகளை நடத்தினர். குண்டூர், டெல்லி, மும்பை ராஜ்கோட் பிகானேர், டேராடூன் ரூர்க்கி, அகல்யநகர் திண்டுக்கல் மற்றும் பிற இடங்களில் நெய் சப்ளை செய்த டெய்ரி நிறுவன உரிமையாளர்களில் அதனுடன் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகத்தில் நேற்று சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில் போலோ பாபா டெய்ரி நிறுவனத்தின் நிர்வாகிகள் பொமில் ஜெயின், விபின் ஜெயின், திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ராஜசேகரன், வைஷ்ணவி டெய்ரி ராஜேஷ் மனசுக்லால் அபூர்வா வினயகாந்த், சாந்தாராம் அஜய் குமார், மகேஷ் குமார் மற்றும் ஆஷிஷ் அகர்வால் ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கலப்பட நெய் விவகாரத்தில் சம்பாதித்து ரூ.45 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துக்களில் முதலீடுகள் செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
