புதுடெல்லி: பிரபல நிழல் உலக தாதாவும் சர்வதேச தீவிரவாதியுமான தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்புடைய நபரை மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் டெல்லி போலீஸ் இணைந்து கைது செய்துள்ளனர். மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலை நடத்திய தாவூத் இப்ராகிம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார்.
இந்தநிலையில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுவிற்கு ஆள் சேர்ப்பு பணிகள் மற்றும் தளவாடங்களை வாங்குவதற்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஒருவர் மும்பையில் இருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் டெல்லி போலீசின் சிறப்பு படையினர் இணைந்து மகாராஷ்டிராவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மாநிலம் முழுவதும் பல நாள் தேடுதலை தொடர்ந்து தொடர்ந்து ஹூசைபா என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் தீவிரவாத சதி வேலை செய்வதற்காக உள்ளூர் இளைஞர்களை தீவிரவாத குழுவில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஹூசைபா தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
