சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்துக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் உந்துசக்தியாக திகழும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப்பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
