புதுச்சேரி: புதுச்சேரியில் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2027ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று(ஜூன் 1) முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1948-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்தத் தேசிய பணி, நாட்டின் திட்டமிடல், தொகுதிகள் மறுவரையறை மற்றும் பொதுக் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு மிக அவசியமான ஒன்றாகும். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகே ஆகிய யூனியன் பிரதேசத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த கணக்கெடுப்பு நேரடி முறையில் நடத்தப்படும்.
இதற்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று மேற்கொள்ள உள்ளனா். இதில் வீடு பட்டியலிடும் கட்டத்தில், வீட்டுவசதி நிலைகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். இந்த அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, 33 கேள்விகளைக் கேட்க கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய பணியின் வெற்றியை உறுதி செய்ய பொதுமக்கள் சில கடமைகளையும், உரிமைகளையும் கொண்டுள்ளனா்.
மேலும், கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக அதிகாரிகள் வீடுகளின் வளாகத்துக்குள் வருவதற்கும், கணக்கெடுப்பு எண்கள் அல்லது குறியீடுகளை இடுவதற்கும் அனுமதித்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த துறையால் சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்கள் அனைத்து சட்டப்பிரிவு 15-ன் கீழ் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளிலும் ஆதாரமாகப் பயன்படுத்தபடாது.
இந்த விதிமுறைகளின்படி இணக்கமற்ற சூழல் அல்லது வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தால் சட்டவிதிகளின்படி ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆட்சியர் குலோத்துங்கன் கூறியுள்ளார்.
