கடந்த 6 ஆண்டுகளில் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.17,800 கோடி கடன்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: “பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின்கீழ் கடந்த 6 ஆண்டுகளில் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.17,800 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது” என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஒன்றிய அரசால் கடந்த 2020 ஜூன் 1ம் தேதி பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகள் ஆத்மா நிர்பார் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகளை எட்டி உள்ளது. இந்நிலையில் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் 2020ல் தொடங்கப்பட்ட பிஎம் ஸ்வநிதி திட்டத்தின்கீழ் ரூ.17,800 கோடிக்கும் அதிகமான பிணையில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 75.5 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு 1.12 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கேஷ்பேக் ஊக்கத்தொகை மற்றும் வட்டி மானியங்கள் மூலம் தெருவோர வியாபாரிகள் ரூ.800 கோடி அளவுக்கு பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தில் 46 சதவீதம் பேர் பெண்களாகவும், 70 சதவீதம் பேர் விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இந்த திட்டம் மார்ச் 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: