சிபிஎஸ்இ ஓஎஸ்எம் விவகாரம் குறித்து பிளஸ் 2 மாணவர்களுடன் கலந்துரையாடினார் ராகுல்: சக தேசவிரோத சோரஸ் ஏஜென்ட்கள் என கிண்டல்

புதுடெல்லி: சிபிஎஸ்இ ஓஎஸ்எம் விவகாரத்தில் குளறுபடிகள் குறித்து ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்த அறிமுகம் செய்யப்பட்ட ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) டிஜிட்டல் முறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் மதிப்பெண் குறைந்ததால் மறுமதிப்பீட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பித்த போது, தங்களின் விடைத்தாளே மாறியிருப்பது குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த தகவலை முதல் முதலில் வேதாந்த் என்ற மாணவர் எக்ஸ் தளத்தில் வெளியிட வைரலானது. இதனால் வேதாந்த்தை சிலர் சமூக ஊடகங்களில் பாகிஸ்தானியர், தேச துரோகி என கடுமையாக தாக்கி பதிவுகளை வெளியிட்டது சர்ச்சையானது. இந்நிலையில், வேதாந்த் உள்ளிட்ட 12ம் வகுப்பு மாணவர்களுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடி உள்ளார். அதன் 90 வினாடி குறும் வீடியோவை ராகுல் காந்தி தனது சமூக ஊடக கணக்குகளில் நேற்று வெளியிட்டார்.

இந்த வீடியோவுடன் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘‘இது எனது சக தேசவிரோத சோரஸ் ஏஜென்டுகளுடன் உண்மைகளை வெளிப்படுத்தும் உரையாடல். வேதாந்த்தும் அவரது நண்பர்களும் சிபிஎஸ்இ மற்றும் மோடி அரசிடம் எளிய கேள்விகளைக் கேட்ட, ஆனால் பதில்களுக்கு பதிலாக, அவமானங்களைப் பெற்ற திறமையான, துணிச்சலான இளம் இந்தியர்கள். அவர்கள் பிரகாசமான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள். அவர்கள் அதை அடைவதை நாங்கள் உறுதி செய்வோம்’’ என்றார்.

* பாதுகாப்பு குறைபாட்டை ஒப்பு கொண்ட சிபிஎஸ்இ
ஓஎஸ்எம் வெப்சைட்டில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகள் தற்போது நீக்கப்பட்டிருப்பதாக சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று அறிவித்தது. மேலும், இக்குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பொதுமக்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அவர்களிடம் சிலரிடம் நேரில் பேசியிருப்பதாகவும் சிபிஎஸ்இயின் எக்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓஎஸ்எம் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக 19 வயது மாணவன் நிசர்கா அதிகாரி என்பவர் அம்பலப்படுத்தினார். அது குறித்து அவர் சிபிஎஸ்இக்கு இமெயில் அனுப்பிய போது அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சமூக ஊடகத்தில் நிசர்கா பதிவிட்டதும் பதிலளித்த சிபிஎஸ்இ, ஹேக் செய்யப்பட்டது மாதிரி வெப்சைட் என கூறியது. இப்போது ஓஎஸ்எம் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை சிபிஎஸ்இயே ஒப்புக் கொண்டிருக்கிறது.

கருப்பு பட்டியல் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு?
ஓஎஸ்எம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட்டை சேர்ந்த 17 வயது மாணவன் சர்தாக் சித்தன்ட், ஓஎஸ்எம் அமைப்பிற்கான ஒப்பந்தம் ஐதராபாத்தை சேர்ந்த கோஎம்ட் எஜூடெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்துள்ளார். அதில் கோஎம்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை தர பல்வேறு விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பதாக அவர் கண்டறிந்துள்ளார்.

இத்தகவல்களை சர்தாக் தனது இணையபக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனங்கள் பங்கேற்க கூடாது என்ற விதி, தற்போது கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க தடை என மாற்றப்பட்டிருக்கிறது. இதுதவிர நிறுவனத்தின் குறைந்தபட்ச வருமான வரம்பு ரூ.50 கோடி என்ற பல விதிமுறைகள் சமரசம் செய்யப்பட்டுதான் கோஎம்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டிருப்பதாக சர்தாக் குற்றம்சாட்டி உள்ளார்.

இது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. கோஎம்ட் நிறுவனம் முன்பு வேறொரு பெயரில் இயங்கி வந்த போது தெலங்கானா கல்வி வாரியத்தில் குறைபாடான வினாத்தாள் மதிப்பீட்டு தொழில்நுட்பத்தை வழங்கி, அதனால் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: