ராணுவ வீரர்களுக்காக நிதி திரட்டிய தமிழக பெண் கல்வியாளரை பாராட்டினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ராணுவ வீரர்களுக்காக பள்ளி மாணவர்களிடம் நிதி திரட்டி தேச பக்தியை வளர்த்ததாக தமிழ்நாட்டின் பெண் கல்வியாளர் கிரிஜாவை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் நேற்று பேசியதாவது: தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் நான் ஒரு ஆசிரியரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அவரது பெயர் கிரிஜா அம்மா. சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா உட்பட 15 பள்ளிகளை நடத்தி வருகிறார்.

அவரது தேசபக்தி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது. மன் கி பாத் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட அவர், ராணுவ வீரர்களுக்கு சேவை செய்ய உறுதி ஏற்றார். அதற்காக அவர் தனது அனைத்துப் பள்ளிகளின் மாணவர்களையும் ஊக்குவித்தார். துணிச்சலான வீரர்களுக்காக தினமும் ஒரு ரூபாய் பங்களிக்குமாறு குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் ஒரு வருடத்தில் 365 ரூபாய் சேகரித்துள்ளனர்.

இந்தச் சிறிய பங்களிப்புகளின் வாயிலாக, ஏறத்தாழ 40 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது. பின்னர், கிரிஜா அம்மாள் அந்த முழுத் தொகைக்குமான காசோலை ஒன்றை ஒப்படைத்தார். இது பாரதத் தாயின் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு தான் சென்னையின் முதல் இந்து பள்ளி தனது 50 ஆண்டு கால நிறைவு விழாவை கொண்டாடியது. நாட்டின் கல்வி மற்றும் கலாச்சாரப் பெருமையை முன்னெடுத்துச் செல்வதில், இந்தப் பள்ளி அமைப்பின் பங்கு மிகவும் பாராட்டுக்குரியது. இதில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

குறிப்பாக, நமது வீரத் தளபதிகளுக்கு பங்களித்த மாணவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். சமீபத்தில் நெதர்லாந்து நாட்டிற்கு சென்ற போது, சோழர்கள் காலத் தொன்மையான தாமிரப் பட்டயங்கள் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக பல நாடுகளிலிருந்து எனக்குத் தொடர்ந்து செய்திகள் கிடைத்து வருகின்றன. இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் நிறைய ஆவல் இருக்கிறது.

இவற்றிலே 21 பெரிய மற்றும் 3 சிறிய பட்டயங்கள் இருக்கின்றன. இவை முக்கியமாக பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழன் வாயிலாக அவருடைய தந்தையார் பேரரசர் ராஜராஜ சோழன் அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி வைத்தல் தொடர்பானது. ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை ஒரு புத்த விஹாரம் அமைக்க தானமாக அளிப்பது பற்றி இதிலே குறிப்பு இருக்கிறது.

இந்தத் தாமிரப் பட்டயங்களிலே சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கிறது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல் வல்லமை எத்தனை மகத்தானதாக விளங்கியது என்பதை இதிலிருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு அவர்களுக்கு இருந்த தொடர்புகளைப் பற்றிய தகவல்களும் இவற்றிலே காணக் கிடைக்கின்றன.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் வளமான வரலாறும், கலாச்சாரமும் தொடர்பாக நம்மனைவருக்கும் பெருமிதம் ஏற்படுகிறது.  இந்த அரசு இந்தியாவின் விலைமதிப்பில்லாத மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.இவ்வாறு கூறினார்.

* வெயிலில் கவனமாக இருங்கள்
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இப்போது நாட்டின் பல பாகங்களில் தீவிரமான வெப்பம் காணப்படுகிறது. கடுமையான வெப்பம், சூடான காற்று, இதுபோன்ற பருவநிலைகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து தண்ணீர் குடியுங்கள். வெயிலில் செல்ல வேண்டியிருந்தால், கவனித்துச் செல்லுங்கள். அரசின் பல்வேறு துறைகள் அளித்திருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்கத் தவறாதீர்கள்’’ என்றார்.

Related Stories: