சிபிஎஸ்இ தேர்வு விடைத்தாள் திருத்தும் விவகாரத்தில் ‘கருப்பு பட்டியல்’ நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு..? மாணவர் அம்பலப்படுத்திய தகவல்களால் பரபரப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் மதிப்பீட்டு டெண்டரில் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக விதிகள் தளர்த்தப்பட்டதாக ஜார்கண்ட் மாணவர் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ நடத்திய தேர்வின் ‘ஆன்ஸ்கிரீன் மார்க்கிங்’ எனப்படும் கணினி வழி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் குளறுபடிகள் இருப்பதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் தனது விடைத்தாள் மங்கலாகவும், அரைகுறையாகவும் திருத்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சர்தாக் சித்தாந்த் (17) என்ற பள்ளி மாணவர், இது குறித்து விரிவான விசாரணையில் இறங்கினார். இதற்காக அவர் பொது இணையதளத்தில் இருந்த 576 ஒன்றிய அரசு ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் மூலம், சிபிஎஸ்இ அமைப்பு தனது விடைத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்தத்தை ஐதராபாத்தை சேர்ந்த கோஎம்ட் எடுடெக் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக, டெண்டர் விதிகளில் திட்டமிட்டு முறைகேடுகளை செய்துள்ளதாக தனது இணையதள பக்கத்தில் ஆதாரங்களுடன் வெளியிட்டார். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்தாக் சித்தாந்த் வெளியிட்டுள்ள விவரங்களின்படி,
சிபிஎஸ்இ அமைப்பு கடந்த 2025ம் ஆண்டில் மூன்று கட்டங்களாக இந்த டெண்டர் நடைமுறையை நடத்தியுள்ளது. இதில் பிப்ரவரி 2025ம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் டெண்டர் திடீரென இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. மே 2025ம் ஆண்டில் நடந்த இரண்டாவது டெண்டரில் டிசிஎஸ் உள்ளிட்ட 4 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றும், அவை தொழில்நுட்ப தகுதியை எட்டவில்லை என்று கூறி அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 2025ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மூன்றாவது டெண்டரில், கோஎம்ட் எடுடெக் நிறுவனத்திற்கு சாதகமாக விதிகள் மாற்றப்பட்டு அவரிடம் ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பாக, முன்பு கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கக் கூடாது என்ற விதி, தற்போது கருப்பு பட்டியலில் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கக் கூடாது என தளர்த்தப்பட்டது.

மேலும், நிறுவனத்தின் குறைந்தபட்ச வருவாய் வரம்பு 50 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வரம்பை கோஎம்ட் நிறுவனம் வெறும் 1.7 சதவீதம் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்தில் மட்டுமே கடந்திருந்தது. இது தவிர, சிஎம்எம்ஐ தரச்சான்றிதழ் தகுதி லெவல் 5ல் இருந்து லெவல் 3 ஆக குறைக்கப்பட்டதுடன், ஓய்வு பெற்ற சிபிஎஸ்இ அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான இடைக்காலம் 2 ஆண்டிலிருந்து 1 ஆண்டாக குறைக்கப்பட்டது. தவறுக்கான அதிகபட்ச வரம்பு 0.5 சதவீதம் என்ற விதியும் நீக்கப்பட்டது போன்ற 15 முரண்பாடுகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த இடைநிலைத் தேர்வு முடிவுகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் முடிவுகளில் குளறுபடி ஏற்படுத்திய குளோபரினா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமே, தற்போது கோஎம்ட் எடுடெக் என பெயர் மாற்றம் பெற்று இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது அரசியல் களத்திலும் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இந்த விண்டேஜ் முறைகேடு குறித்து ஒன்றிய அரசிடம் உரிய விளக்கம் கேட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர், ‘அனைத்து அரசு விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு, தரமான மற்றும் குறைந்த புள்ளி அடிப்படையில் தகுதியான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. முந்தைய சுற்றுகளின் குறைகளை களைவதற்காகவே விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டனவே தவிர, யாருக்கும் சாதகமாக செய்யப்படவில்லை’ என்று கூறியுள்ளார். மேலும், ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் எந்த ஒரு அரசு அமைப்பாலும் கருப்பு பட்டியலில் வைக்கப்படவில்லை என்றும் சிபிஎஸ்இ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: