ஓட்டல் அதிபரை காதலித்து திருமணம் செய்தாலும் தாய்மையடையும் ஆசை எழவில்லை: விவாகரத்துக்கு காரணம் சொன்ன நடிகை

மும்பை: தனது கணவர் மனிஷ் மகீஜாவுடனான விவாகரத்து மற்றும் தனிமை குறித்து பிரபல பாலிவுட் நடிகையும் இயக்குனருமான பூஜா பட் உருக்கமாக பேசியுள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து உணவக அதிபரான மனிஷ் மகீஜாவை பிரபல நடிகையும் இயக்குனருமான பூஜா பட் கடந்த 2003ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார். தனது முதல் இயக்க படமான ‘பாப்’ திரைப்படத்தில் பணியாற்றிய போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 11 ஆண்டுகள் கணவன் – மனைவியாக வாழ்ந்த இந்த தம்பதியினர், கருத்து வேறுபாடுகள் ஏதுமின்றி பரஸ்பர சம்மதத்துடன் கடந்த 2014ம் ஆண்டு தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிந்தனர்.

தங்களுக்குள் குழந்தைகள் இல்லாததால் பிரிந்து செல்லும் முடிவை நேர்மையுடன் எடுக்க முடிந்தது என்றும், முப்பது வயது காலகட்டத்தில் தொடர்ந்து உழைத்ததால் தனக்கு தாய்மையடையும் ஆசை எழவில்லை என்றும் பூஜா பட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பூஜா பட் அளித்த பேட்டியில் தனது விவாகரத்துக்கான உண்மையான காரணம் குறித்து விளக்கியுள்ளார். அதில், ‘மற்றொரு நபர் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் வந்ததால் நாங்கள் பிரியவில்லை. கணவருடன் வாழும் காலத்தில் எனக்குள் ஏற்பட்ட தனிமையே எங்களது பிரிவுக்கு காரணம். ஒரு கட்டத்தில் எங்களை நாங்களே இழந்துவிட்டோம்.

பொய்யான வாழ்க்கையை வாழ விரும்பாமல், எனது சுயத்தை மீட்கவே விவாகரத்து பெற்றேன். விவாகரத்துக்குப் பிறகும் எங்களுக்குள் நட்பு தொடர்ந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்களது நட்பும் முடிவுக்கு வந்தது. தற்போது அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். தற்போது நான் மன அமைதியுடன் தனியாக வாழ்ந்து வருகிறேன்’ என்று பூஜா பட் உருக்கமாக கூறியுள்ளார்.

Related Stories: