26 மாவட்ட செயலாளர்கள் 3 நாளுக்கு முன் நீக்கப்பட்ட நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் 2 பேர் அதிரடி நீக்கம்

சென்னை: கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவுக்கு தெரிவித்த 26 அதிமுக மாவட்ட செயலாளர்கள் 3 நாளுக்கு முன் நீக்கப்பட்ட நிலையில், மேலும் 2 அதிமுக மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கடந்த 14ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 47 எம்எல்ஏக்களும் விஜய்க்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கட்சி கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டு இருந்தார்.

கொறடாவின் உத்தரவை மீறி, அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 பேர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதனால் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதுடன், அதிமுக கட்சியும் இரண்டாக இருந்தது. இதையடுத்து விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பென்ஜமின் மாவட்ட செயலாளர் பதவி உள்ளிட்ட 26 பேரின் பதவிகளையும் அதிரடியாக பறித்தார்.

அவர்களுக்கு பதில் கடந்த 14ம் தேதி இரவே புதிய மாவட்ட செயலாளர்களையும் எடப்பாடி நியமித்தார். இந்த நிலையில் மேலும் 2 அதிமுக மாவட்ட செயலாளர் பதவிகளை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.கே.வைரமுத்து, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.கிருஷ்ணமுரளி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: