தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர் விமான நிலையத்தில் பிடிபட்டார்: கைது எண்ணிக்கை 18 ஆனது

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. இந்த வாக்குப்பதிவின்போது வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர், சட்டவிரோதமாக வாக்களித்ததாக தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விமானங்களில் பயணிக்க வரும் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களின் கைவிரல்களை கண்காணித்து, அவர்கள் விரல்களில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்தால் அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி சென்னை, மதுரை விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இதுவரை 17 வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், தமிழக சட்டசபை தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.

அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை கே.கே.நகரில் இருந்து கிஷோர் (64) என்பவர், துபாய் வழியாக அமெரிக்கா செல்ல வந்திருந்தார். அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால், அமெரிக்க பாஸ்போர்ட் அவரிடம் இருந்தது. ஆனால் அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில், தேர்தலில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்ததை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரிடம் விசாரித்த போது, சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அவர் வாக்களித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குடியுரிமை அதிகாரிகள் கிஷோரின் பயணத்தை ரத்து செய்து, அவரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்து கைதானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் சட்டவிரோதமாக தேர்தலில் வாக்களித்து விட்டு, வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது பலர் கைதாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை குடியுரிமை பெற்ற 2 பேர் கைது: மதுரை விமான நிலையத்தில் நடந்த சோதனையில், கொழும்பு செல்ல இருந்த கிருஷ்ணசாமி (62) பிடிபட்டார். இவரது விரலில் ஓட்டளித்ததற்கான மை இருந்தது. இவர் இலங்கை நாட்டின் குடியுரிமை பெற்றவர். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் சட்டவிரோதமாக இவர் வாக்களித்தது தெரிந்தது. இதேபோல் இலங்கை குடியுரிமை பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேரி ஜெனோ (64) என்பவரும் சட்ட விரோதமாக வாக்களித்தது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: