25 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநருடன் இன்று எடப்பாடி சந்திப்பு: இரு அணிகளுக்கு இடையே மோதல் உச்சம்

சென்னை: கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 25 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆளுநரை சந்திக்க உள்ளார். அதிமுகவில் இரு அணிகளுக்கு இடையே மோதல் உச்சமடைந்து வருகிறது. சட்டமன்றத்தில் கடந்த மே 13ம்தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவை எதிர்த்து அதிமுக வாக்களிக்கும் என எடப்பாடி அறிவித்தார். ஆனால், வேலுமணியின் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சி.வி.சண்முகம், எஸ்பி.வேலுமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்களின் கட்சி பதவியை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து இரு தரப்பினரும் அடுத்தடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து மனு அளித்தனர். மேலும், கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏக்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி ஆளுநரிடம், எடப்பாடி தரப்பு மனு அளித்துள்ளது.

இந்நிலையில், எடப்பாடி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏக்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். ஆளுநர் அர்லேகர் இல்லாததால், அவரது செயலாளரிடம் மனு கொடுத்தனர். ஆளுநர் தற்போது கேரளாவில் இருப்பதால் சென்னை வந்ததும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, முன்னதாகவே அவரது ஆதரவாளர்கள் ஆளுநரின் தனிச் செயலாளரைச் சந்தித்து இது தொடர்பான கடிதத்தை அளித்துள்ளனர். தற்போது கேரள பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரை நேரடியாகச் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். இதற்கிடையே, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலங்களவை எம்பிக்கள் இன்பதுரை, தனபால் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர்.

மேலும் வழக்கறிஞர்களுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 25 அதிமுக எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்வது குறித்து வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் கட்சிப் பிளவு காரணமாக இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

* எதிர் தரப்பு கையெழுத்து கேட்டா போடாதீங்க… ஆதரவாளருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
அதிமுக மீண்டும் இரண்டாக உடைந்து மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. எஸ்.பி.வேலுமணி தரப்பு தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணி தரப்போ எங்களை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என்று கூறி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க வேண்டுமென எஸ்பி.வேலுமணி தரப்பினர் கூறி வருகிறார். அதுமட்டுமல்ல, அதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு கையெழுத்து வாங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த எடப்பாடி பழனசாமி, தனது ஆதரவாளர்களிடம் பொதுக்குழுவை கூட்ட எதிர்ப்பு தரப்பு கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார். இதனால் அதிமுகவில் மோதல் உச்சம் தொட்டு வருகிறது.

Related Stories: