சென்னை: நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், விசிக தலைவர் திருமாவளவன், பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மையச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ்,
எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதீன், மமக துணை பொதுச்செயலாளர் எம்.யாக்கூப், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் அரிமா அசாருதீன், எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.ஹரீம், பொதுப் பணிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் கி.வீரமணி பேசுகையில், “நீட்டுக்கு ஆன்-லைன் தேர்வு என்பது தீர்வாகாது. நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இந்த போராட்டம் ஆரம்பம் தான். எங்கள் போராட்டம் தொடரும். முதல்வர் விஜய்யும் நீட் தேர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அறிக்கை மூலம் தெரிவித்து இருப்பதை பாராட்டுகிறோம்” என்றார்.
திருமாவளவன் பேசுகையில், “மருத்துவப் படிப்பில் சேர கொடுக்கப்படும் ‘டொனேஷன்’ தொகையை தடுப்பதற்கு தான் நீட் தேர்வு என்றார்கள். ஆனால், இப்போது ‘டொனேஷன்’ அளவு தொகையை பயிற்சி நிறுவனங்களுக்கு செலுத்தும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இந்தியா முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்” என்றார். இதேபோல நீட் தேர்வு ரத்து கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
