திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை ஒரே நாளில் ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகளில் சுமார் 68 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது துணி நூல் ஆகும். பருத்தி விலையை பொறுத்து நூல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். பருத்தி தட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பருத்தி விலை குறைந்தது.
நூல் விலையில் மாற்றம் இல்லாமல் சராசரி விலையில் இருந்து வந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு பருத்தியும் விலை அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரியிலிருந்து மே வரை மாதம் இரண்டு முறை நூல் விலை ரூ. 7 முதல் ரூ.10வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 1ம் தேதி வரை சுமார் ரூ.41 வரை நூல் விலை உயர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மீண்டும் அனைத்து ரக நூல்களின் விலையை ரூ.20 முதல் ரூ.25 வரை அதிரடியாக உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 5 மாதத்தில் மட்டும் பருத்தி நூல் கிலோ ஒன்றிற்கு ரூ.61 முதல் ரூ.66 வரை விலை உயர்ந்துள்ளது. இது பின்னலாடை உற்பத்தி துறையினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நூல் வியாபாரி பிரசன்னா கூறுகையில்: ‘‘தற்போதைய நூல் விலை உயர்வு தாக்கம் மிகப்பெரும் அளவில் இருக்கும்.
இது உற்பத்தி துறை மட்டுமல்லாது அதனை சார்ந்த துணை தொழில்களையும் பாதிப்படையச்செய்யும்’’ என்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘நூற்பாலைகள் திருப்பூரின் தொழில் துறையை பாதுகாக்கும் பொருட்டு தொழில்துறையினரோடு கலந்து பேசி நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
