அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய பிளவால் ‘நமது அம்மா’ நாளிதழ் நிறுவனர் பதவியிலிருந்து எடப்பாடி பெயர் நீக்கம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர் சேர்ப்பு

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய பிளவால் நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பதவியிலிருந்து எடப்பாடி பெயர் நீக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் ஆட்சியை இழந்து இருந்த அதிமுக, இந்த முறையும் தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி என்ற பேச்சு எழுந்த நிலையில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவியது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் விவகாரம் அதிமுகவில் புயலை கிளப்பியது.

இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கையால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தனித்தனியே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகங்களாகச் செயல்பட்டு வரும் ‘நமது அம்மா’ நாளிதழ் மற்றும் ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி ஆகியவை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென செய்திகளை வெளியிட தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. இந்த உட்கட்சிப் பூசலின் உச்சக்கட்டமாக, ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர் புதிய நிறுவனராக இடம்பெற்றுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பியிருப்பதும், நிர்வாகப் பொறுப்புகள் கைமாறுவதும் அதிமுகவில் மீண்டும் ஒரு அதிகாரப் போர் தொடங்கிவிட்டதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதனால் கட்சியின் எதிர்காலம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் உருவாகியுள்ளது.

இதனிடையே நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக அதிமுகவை சேர்ந்த கல்யாண சுந்தரம் இருந்து வந்தார். இவர் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக நமது அம்மா நாளிதழில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, ஆசிரியர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிடுத்து கொண்டார். இதனையடுத்து தற்போது நாளிதழின் நிறுவனர் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு சம்பவம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சமயத்தில் நடந்தது.

அதாவது, முன்னதாக அதிமுக உட்கட்சி மோதல் நடந்த சமயத்தில் இபிஎஸ் தரப்பு நமது அம்மா நாளிதழை தங்கள் வசம் கொண்டு வந்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் பெயர் நிறுவனரில் இருந்து நீக்கப்பட்டது. இபிஎஸ் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரின் பெயரும் இடம்பெற்று இருந்த நிலையில் ஓபிஎஸ் பெயரை நீக்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. இந்நிலையில் தற்போது ஓபிஎஸ்சுக்கு செய்தவை தற்போது இபிஎஸ்சுக்கு நடந்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: