எட்டயபுரம், மே 15: எட்டயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில்பட்டி வஉசி நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (32). இவர், தனது நண்பர்கள் இருவருடன் நேற்று அதிகாலை காரில் மதுரை பாண்டி கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு தரிசனம் முடித்துவிட்டு கோவில்பட்டிக்கு திரும்பிச் செல்லும் வழியில் எட்டயபுரம் அடுத்த குமாரகிரிபுதூர் விலக்கு அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் வரும்போது காரின் இன்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
உடனடியாக பாலாஜி தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு நண்பர்களுடன் கீழே இறங்கினார். இதைத் தொடர்ந்து அவர், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
