அதிமுகவில் பிளவு ஏற்படுத்த லாட்டரி சீட்டு பணம் ரூ.1000 கோடி: ஆதிராஜாராம் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுகவில் பிளவு ஏற்படுத்த லாட்டரி சீட்டு பணம் ரூ.1000 கோடிக்கு மேல் வாங்கி உள்ளனர் என அதிமுக நிர்வாகி ஆதிராஜாராம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக, பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும் இரு அணிகளாகச் அதிமுக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தவெக ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரித்து சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

எதிர்த்து பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனையடுத்து, அதிமுக பொது செயலாளர் பழனிசாமியை எதிர்த்து வாக்கு அளித்த நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மொத்தம் 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும் பல்வேறு தொகுதிகளைச் சேர்த்து 17 மாவட்டங்களாக குறைத்து, அவற்றுக்கான புதிய மாவட்ட செயலாளர்களையும் பழனிசாமி நியமித்து உத்தரவிட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் நேற்று காலை சென்னையில் உள்ள பழனிசாமி இல்லத்திற்கு வந்து பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதற்கிடையில் அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் நிருபர்களிடம் கூறியதாவது: புரோக்கர் மணிக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன். லீமா ரோஸை அழைத்து வந்து வற்புறுத்தி கட்சியில் சேர்த்து பதவி போட்ட அப்போ பொது செயலாளர் செய்தது செல்லும், இவர்களுக்கு எல்லாம் எம்எல்ஏ சீட் கொடுத்த அப்போ பொதுச் செயலாளர் செல்லும், அப்போ இனித்தது.

இப்போ இவர்கள் எல்லாம் கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். லாட்டரி சீட்டு பணத்தை 1000 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி இந்தக் கட்சியைப் பிளவு பண்ணி ஒரு பெண்மணியை கட்சிக்கு தலைமையாக்க வேண்டும் என இந்த புரோக்கர் மணி திட்டம் போட்டார். இவர்களுக்கு சீட் கொடுத்தது செல்லும், லீமா ரோஸை கொண்டு வந்து கட்சியில் சேர்த்தது செல்லும், அவர்களுக்கு பதவி கொடுத்தது செல்லும், இப்போ கட்சியை உடைத்து யார் காலிலோ போடுவதற்கு பணம் வாங்கிய பிறகு கத்திட்டு இருக்கிறார்கள்.

காலையில் அவர்கள் தான் பழனிசாமி பொது செயலாளர் என்று தெரிவித்தார்கள், மாலையில் என்ன போதையில் இருக்கிறார்களா? பொது செயலாளர் பழனிசாமி தான். எம்எல்ஏ பதவி கொடுத்தது, பதவி வாங்கிக் கொடுத்தது செல்லும் என்றால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது செல்லாது என்றால், புரோக்கர் மணி வேலை முடிந்து விட்டது. இனி ஊருக்குப் பக்கம் செல்லுவது தான் நல்லது. வேலுமணியைப் பொறுத்தவரை கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், சாவு வீட்டில் பிணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: