மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விடியல் பயணம் திட்டம் ரத்து? பெண்களிடம் அடாவடியாக டிக்கெட் வசூல்: பிங்க் நிற பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விடியல் பயணம் திட்டம் ரத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாதாரண பேருந்துகளில் பயணிக்கும் மகளிரிடம் அடாவடியாக டிக்கெட் கட்டணம் வசூலிப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பெண்களின் வாழ்வை மேம்படுத்திட பல முன்னோடி திட்டங்களை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் நிறைவேற்றினார்.

அதில், பெண்களின் பயண செலவு சுமையை குறைத்திடவும், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாமல் பயணிக்க வழிவகுக்கும் வகையிலும் ‘விடியல் பயணம்’ கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் 7,712 சாதாரண கட்டண நகர பேருந்துகள் இயக்கப்பட்டு 897 கோடி முறை பெண்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், வேலைக்கு செல்லும் பெண்கள், சிறு வியாபாரிகள் மற்றும் அன்றாட பயணங்களை மேற்கொள்வோர் மாதம் சராசரியாக ரூ.888 வரை சேமிக்க முடிவதாக கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.

பூ விற்பவர்கள், காய்கறி வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், சுய தொழில் செய்யும் பெண்கள் அனைவரும் இத்திட்டம் மூலம் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வென்று கடந்த 10ம் தேதி முதல்வராக விஜய் ஆட்சி பொறுப்பேற்றார். தேர்தலின் போது அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்து அதற்கு ‘‘வெற்றி பயணம் திட்டம்’’ என பெயர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல், வெற்றி பெற்றால் முதல் கையெழுத்தாக இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நிலைமை அப்படியே தலை கீழானது தான் மிச்சம். இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் கடந்த சில நாட்களாக பேருந்துகளில் பயணிக்கூடிய பெண்களிடம் இலவசமாக செல்ல தரக்கூடிய டிக்கெட்களை தராமல் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொள்ளுமாறு நடத்துனர்கள் வலியுறுத்துவதாக பெண் பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், மகளிர் விடியல் பயண பேருந்தை அறிந்து கொள்ள முன்பக்கத்தில் பிங்க் நிற வண்ணம் தீட்டப்பட்ட பேருந்துகள் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனையும் தற்போது குறைத்துள்ளதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்கள் சென்றால் இத்திட்டத்திற்கு புதிய அரசு மூடுவிழா நடத்தி திட்டத்தை ரத்து செய்ய நிலையும் ஏற்படக்கூடும் என பெண்கள் புலம்பி வருகின்றனர்.

Related Stories: