சென்னை: எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எந்த நேரத்திலும் அதிமுக தலைமை அலுவலகத்தை எஸ்.பி.வேலுமணி தரப்பு அபகரிக்கலாம் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, உதவி கமிஷனர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை வென்றது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பதவியேற்ற பிறகு 11 தேர்தலில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்மூகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால் எடப்பாடி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, உதயகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும், தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்றும் உறுதியாக கூறிவிட்டார்.
எனவே, எடப்பாடி தரப்பு தனியாகவும், எஸ்.பி.வேலுமணி தரப்பு சி.வி.சண்மூகம் வீட்டில் தனியாகவும் ஆலோசனை நடத்தினர். நேற்று முன்தினம் சட்டசபையில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக எடப்பாடி தரப்பு 22 எம்எல்ஏக்கள் ஆதரவும், எஸ்.பி.வேலுமணி தரப்பில் 25 எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவும் தெரிவித்தனர். சட்டசபை முடிந்து எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி தரப்பினர் மீதும், வேலுமணி மற்றும் சி.வி.சண்மூகம் தரப்பில் எடப்பாடி மீதும் குற்றம்சாட்டினர்.
எஸ்.பி.வேலுமணி மீண்டும் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுடன் இணைந்து அதிமுக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது எடப்பாடி தரப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி உள்பட 25 எம்எல்ஏக்களை அதிரடியாக கட்சி பதவியில் இருந்து எடப்பாடி நீக்கி உத்தரவிட்டார். அவர்களுக்கு பதிலாக புதிதாக 25 மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார். இந்த பிரச்னை ஒரு பக்கம் நடந்து வந்த நேரத்தில் போயஸ் கார்டனில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று அவரும் கோரிக்கை வைத்தார்.
இது எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு மேலும் பலத்தை கொடுத்தது. இதனால் எந்த நேரத்திலும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ராயப்பேட்டை அவ்வை சண்மூகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றலாம் என்ற செய்தி பரவியது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
அந்த புகாரை தொடர்ந்து ராயப்பேட்டை உதவி கமிஷனர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடையே மோதல் முற்றியுள்ள நிலையில் எப்ப வேண்டும் என்றாலும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களை தடுக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
* அதிமுக அலுவலகத்திற்கு எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
சென்னை எம்.ஆர்.சி. நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் நேற்று அளித்த பேட்டி:
அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் வர இருப்பதாகக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த ரத்தம் அதிமுகவின் ரத்தம்.
சாதாரணமான எங்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாவும் பதவிகளை கொடுத்து, அழகுபார்த்த இயக்கம் அதிமுக. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம். இந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை நாங்கள் எங்களின் கோயிலாக மதிக்கிறோம்.
எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்துக்காகவும் எங்கள் கோயிலான தலைமை அலுவலகத்தின் மீது தூசிப்படுவதற்கோ, சிறிதளவும் பாதிப்பு ஏற்படுவதற்கோ அனுமதிக்க மாட்டோம். எந்த காரணத்துக்காகவும் அங்கே வர மாட்டோம். நாங்கள் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த பிறகுதான், அங்கே எங்களின் கால் பதியும். ஆகையால், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. எந்த சூழ்நிலையிலும் அதிமுக அலுவலகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த விட மாட்டோம்.
