விசிக அலுவலகத்திற்கு சோபா வந்தது ஏன்?: திருமாவளவன் விளக்கம்

 

 

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: விசிக சார்பில் வரும் மே 17ம் தேதி தேசிய இனக் கொலை நாள் அனுசரிக்கப்படுகிறது. சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது உரையாற்றிய முதல்வர் விஜய் கடந்த அரசு கொண்டு வந்த திட்டங்கள் இடைநிறுத்தாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவோம் என்ற உறுதியை அளித்திருக்கிறார். அந்த வகையில் மகளிர் உரிமைத் திட்டம் தொடரும் என சொன்னது மகிழ்ச்சியானது. ஆனால் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கக்கூடிய நாள் சற்று தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருப்பதால் கட்டாயம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அலுவலகத்திற்கு வந்த சோபா ஏற்கனவே ஆர்டர் செய்தது. அந்த சோபா வரும் போது மீடியா நண்பர்கள் இருந்தார்கள். அதனால் இது தற்செயலாக நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, விசிகவிற்கு வந்த சோபாவை வைத்து சொல்லவில்லை. அதிமுகவில் உருவாகிய ஒரு அணியை முதல்வர் சந்திக்கும் போது நடைபெற்ற நிகழ்வை அவர் சுட்டிக்காட்டுகிறார் என்று கருதுகிறேன்.

எனக்கு தெரிந்த நண்பர்கள் முதலமைச்சர் ஆக்குவது குறித்து பேச்சு நடந்ததாக சொன்னார்கள். ஆனால் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இடதுசாரிகள் எடுக்கும் முடிவை வைத்து எங்கள் கட்சியில் கூட்டம் நடத்தி அதன் பின்னர் முடிவு எடுப்போம் என சொன்னோம். அதன்படி தான் நாங்கள் கலந்தாய்வு செய்து முடிவெடுத்தோம். திட்டமிட்டபடி நடந்த கட்சியின் ஆன்லைன் கூட்டத்தில் எடுத்த முடிவில் பல கருத்துகள் வந்தன. அதன் பின்னர் என்னுடைய முடிவுக்கு கட்டுப்படுவோம் என கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் நாங்கள் அறிவித்தோம். ஆனால் எங்களை பிடிக்காத சிலர் நாங்கள் திரைமறைவில் பேசிக்கொண்டிருக்கிறோம் என அவதூறுகளைப் பரப்பினார்கள்.

குறிப்பாக எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தனர். அவர்கள் வந்து கையெழுத்திட்ட பின்னர் தான் நாங்கள் அறிவித்தோம். என்னுடைய வழிகாட்டுதலின்படி தான் கையெழுத்திடப்பட்டது. அந்த வகையில் ஆதரவுப் படிவத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட தாமதம் ஆகிவிட்டது. கவரிங் லெட்டர் தயாரித்து ஆதவ் அர்ஜூனாவிடம் வழங்கினோம். அதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இதுதான் அன்றைய தினம் காலதாமதத்திற்கு காரணம். திமுகவும் அதிமுகவும் பேசியதா என்பதை அவர்களை கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: