இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்; அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்படும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: தலைவர் என்ற முறையில் நானே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைதிருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சியை அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடதான் ஆட்சி அமைஞ்சிருக்கு.

நமக்கு பெரும்பான்மை கிடைக்கலயே தவிர, கணிசமான எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்கு. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு தான். இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, “எப்படியும் திமுக தான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்”-னு புலம்புறாங்க. அதுமட்டுமல்ல, “இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு – ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன்.

இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம். தோல்விக்கான காரணங்களை திமுக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. அவர் இன்னொருத்தரை கை காட்டுறாரு. இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது. அப்ப, இதுக்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீங்க. திமுகவின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். இதுதான் நிதர்சனம்.

வெற்றி கிடைச்சா அதோட பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏத்துக்குறதுல எந்த தப்பும் இல்ல. அதுதான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக, அடுத்தவர் மேல பழி போடாதீங்க. எல்லாரும் என்ன சொல்றாங்க? அப்படி செஞ்சிருக்கலாம், இப்படி செஞ்சிருக்கலாம், அது நடக்கல, இது நடக்கல, அவரு கண்டுக்கல, இவரு கண்டுக்கல-னு பழி போடுறாங்க. தயவு செஞ்சு இனிமே அதை பண்ணாதீங்க.

தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானது தான். ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது. இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற மீனிங்ல சொல்றேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது. தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து, எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க.

முதல்ல, தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும். அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும். அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன். அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க. திமுக உடன்பிறப்புகள் கிட்டயும் கருத்து கேக்க போறேன்.

உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி ’வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும். திமுக, இந்த தேர்தல்ல செஞ்ச தவறு-னு நீங்க எதை நினைக்கிறீங்க?. நம்ம கிட்ட என்ன மாற்றத்தை எதிர்பார்க்குறீங்க என அதுல எல்லாரும் சொல்லலாம். இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பேன். தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு,வெப்சைட் மூலமா திமுகவின் உடன்பிறப்புகள் மற்றும் நம்ம மேல அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லுற ஆலோசனைகளை வெச்சு, திமுகவின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன்.

அந்த மாற்றம்தான், நம்ம கட்சியை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது. கட்சி அமைப்புல செய்யப்போற இந்த மாற்றங்களுக்கு முன்ன, நாம முதல்ல மாறியாகணும். நாம எல்லாருமே மாறியாகணும். யாரும் விதிவிலக்கு இல்ல. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள்-பொதுக்கூட்டங்கள்-ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டுன களமா சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கு. இதை நான் கடந்த ஐந்தாண்டுகள்ல பல முறை வலியுறுத்துனேன்.

குறிப்பா, காணொலிக் கூட்டங்கள் நடத்தும்போது, சோஷியல் மீடியாவோட ரீச் பத்தி உங்க கிட்ட சொல்லியிருக்கேன். ஆன்லைன் என்பது நமக்கு புதுசு இல்ல. குறிப்பா சொல்லணும்னா, கொரோனா காலகட்டத்துல 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட பொதுக்குழுவை காணொலியிலேயே நடத்திக் காட்டுன பெருமைக்குரிய இயக்கம் திமுக. டெக்னாலஜிய பயன்படுத்துறதுல, இனி நாம கூடுதல் கவனம் செலுத்தணும். திமுகவினர் ஒவ்வொருத்தரும் சமூக வலைத்தளங்கள்ல நேரடியா பங்கெடுத்து செயல்படணும்.

இனி வரும் காலத்துல நம்ம பிரசார ஸ்டைல், நடத்தைகள், செயல்பாடுகள் எல்லாத்தையும் மாத்திக்கணும். முன்னாடி டீக்கடையில உக்காந்து பேசிட்டிருந்த நம்ம அரசியலை, இப்ப சோஷியல் மீடியால பேசியாகணும். விரைவுல கட்சியை சீரமைச்சு, புது எனர்ஜி கொடுப்போம். இப்பவாச்சும், கோஷ்டி அரசியலை விட்டுட்டு, எல்லாரையும் அரவணைச்சு போங்க. மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல. அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது. எல்லாருமே முக்கியம் தான்.

ஒரு கட்டத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம். ஒருவேளை யாராவது, “என்னால செயல்பட முடியாது”-னு நினைச்சா, மனப்பூர்வமாக முன் வந்து விலகிக்கலாம். நான் அதை தவறா சொல்ல மாட்டேன். உழைக்க தகுதியானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அடுத்து வர்ற தேர்தல்ல திமுக கண்டிப்பா வெற்றி பெற்றாகணும். நம்மோட இந்த தோல்வி தற்காலிகம் தான். வெற்றியை நோக்கி பயணிப்போம். திட்டமிடுவோம். தீவிரமாக உழைப்போம். மீண்டு வருவோம். மீண்டும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: