திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் இருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. காக்களூர் பைபாஸ் சாலை வழியாக செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், ஆவடி, தண்ணீர்குளம் மற்றும் பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன. திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் திருவள்ளூர் ஜெஎன். சாலை வழியாக சென்றுவருகின்றன.
ஜெ.என்.சாலை, காக்களூர் பைபாஸ் சாலை சந்திப்பு குறுகலாக இருப்பதால் ஆவடியில் இருந்து வரும் வாகனங்களும் ஜெஎன் சாலையில் இருந்து இந்த சாலை வழியாக பிரிந்து செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகின்றன. சமீபத்தில் சாலையை அகலப்படுத்துவதற்காக இடையூறாக இருந்த மின்மாற்றி மற்றும் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வளைவு பகுதி அகலப்படுத்தப்பட்டது. இதனிடையே ஜெ.என்.சாலை மற்றும் காக்களூர் பைபாஸ் சாலை பிரிந்து செல்லும் சந்திப்பில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளையும் பணியில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து காவலர்களை மதிக்காமல் செல்வதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். ஆட்டோ, பைக்குகள் ஆகியவை விதிகளை மீறி தாறுமாறாக செல்வதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து காவலர்களும் திணறி வருகின்றனர்.
‘’காக்களூர் பைபாஸ் சாலை மற்றும் ஜெ.என்.சாலை சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இந்த பகுதியில் சிறிய ரவுண்டானா அமைத்தால் வாகனங்கள் முறையாக செல்ல வசதியாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் குறையும்’’ என்றும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
