கோட்டை முதல் நீலாங்கரை வரை உள்ள 18 கி.மீ. தொலைவுக்கு சாலை நெடுக கடும் வெயிலில் கால்கடுக்க 800க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு

 

சென்னை: கோட்டை முதல் நீலாங்கரை வரை, சாலை நெடுக நாள் ஒன்றுக்கு 3 முறை கால்கடுக்க கடும் வெயிலில் பெண் காவலர்கள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்படும் பாதுகாப்பு கெடுபிடியால் அப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் புரோட்டா கால் அடிப்படையில் முதல்வர் வீடு மற்றும் தலைமை செயலகம், அவர் செல்லும் சாலைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. முதல்வர் வீடு நீலாங்கரையில் உள்ள கேசினோ டிரைவ் பகுதியில் அமைந்துள்ளது. தினமும் முதல்வர் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்திற்கு செல்கிறார். இதனால் காலை, மதியம், மற்றும் மாலை நேரங்களில் நீலாங்கரை முதல் கோட்டை வரை சாலை நெடுக ஆயுதப்படை பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் என 800 பேர் 15 அடிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தற்போது கத்திரி வெயில் என்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் இயற்கை உடல் உபாதைகளுக்கு செல்லக்கூட முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

பெண் காவலர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க ஒரு கிலோ 3 கிலோ மீட்டர் இடவெளியில் நடமாடும் கழிவறை வைத்துள்ளனர். ஆனால் பெண் காவலர்கள் அவசரத்திற்கு நடமாடும் கழிவறைக்கு கூட செல்ல முடியாத வகையில் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு கெடுபிடி கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வராக ஜெயலிலதா இருந்த போது, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவர் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் முதல் கோட்டை வரை பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதுவும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிக்னல், சாலை வளைவுகளில் மட்டும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலைஞர் முதல்வராக இருந்த போது கூட கோட்டை முதல் கோபாலபுரம் வரை பெரிய அளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தது இல்லை. ஆனால் முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, கலைஞர், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விட 3 மடங்கு பாதுகாப்பு தற்போது காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் கலைஞர் மற்றும் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் அவர்களது வீடுகள் இருந்ததால் முதல்வர் கான்வாய் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தான் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்தது. கான்வாய் சென்ற அடுத்த நொடியே போலீசார் பொது போக்குவரத்தை திறந்துவிடுவார்கள். இதனால் பெரிய அளவில் முதல்வர்கள் செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் இருந்தது இல்லை.

தற்போது முதல்வர் வீடு அமைந்துள்ள நீலாங்கரை முதல் கோட்டை வரை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. ஒவ்வொரு நாளும் அதுவும் பீக்ஹவரில் முதல்வரின் கான்வாய் நீலாங்கரையில் இருந்து கோட்டைக்கு புறப்படுகிறது. வழக்கமாக நீலாங்கரையில் இருந்து கோட்டைக்கு வர 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். முதல்வர் கான்வாயால் நீலாங்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, அடையார், காமராஜர் சாலை வழியாக கோட்டைக்கு வருகிறார். இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் முதல்வரின் கான்வாயால் ஒவ்வொரு சிக்னல்களிலும் 10 நிமிடங்கள் நிற்க வேண்டி உள்ளது. இதனால் 3 மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, நீலாங்கரை முதல் கோட்டை வரை முதல்வர் கான்வாய் செல்லும் சாலைகளில் 300க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர போக்குவரத்து போலீசார் ஒவ்வொரு காவல் எல்லையில் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை தங்களது எல்லையில் கான்வாயில் யாரேனும் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்று கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனால் போலீசாருக்கு முதல்வரின் கான்வாய் புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதால், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் சரியான நேரத்தில் காலை உணவு, மதிய உணவு சாப்பிட முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். முதல்வர் பாதுகாப்புக்காக ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலர்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட காவலர்கள் கோட்டை முதல் நீலாங்கரை வரை கடுமையான வெயிலில் நின்று பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் நிகழ்வு வாகன ஓட்டிகளிடையே பேசுபொருளாக உருவாகியுள்ளது. எனவே முதல்வரின் கான்வாய் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்களின் சுமையை குறைக்க கான்வாய் புறப்படுதற்கு 10 நிமிடத்தில் அவர்களை சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.

 

Related Stories: