சென்னை: சட்டப்பேரவையில் தவெக ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது: பதவியேற்ற அன்று உங்களுடைய ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என சொன்னீர்கள். உங்களது கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தருணத்தில் குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். அதேபோல், முதல்வர் அன்றைக்கு சொன்னார். அனைவருக்கும் வெளிப்படையான ஒரு ஆட்சி தான் செய்வோம் என்று சொன்னார். அப்படியிருக்கையில்,முதல்வரை சந்திக்க யார் முகத்தை மூடிக் கொண்டு சென்றது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவை பெற குதிரை பேரம் நடந்திருந்தால், வரலாற்று சிறப்பு மிக்க இந்த பேரவையில், அதை விட தலை குணிவு எதுவும் கிடையாது. முதல்வர் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும்பொழுது அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் இன்றைக்கு அவரின் ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உங்களுக்கு ராஜகுருவாக இருந்தால் அவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசு பதவி வழங்கி இருக்க கூடாது. இதன் மூலம் வருங்கால இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்? இவ்வாறு அவர் பேசினார்.
