தன் கட்டத்தையே கரெக்டா கணிக்க தவறினார் எல்லா பக்கமும் எதிர்ப்பு ஜோதிடர் அரசு வேலை பறிப்பு

 

சென்னை: முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கப்பட்டதற்கு சட்டப்பேரவையில் நேற்று அனைத்துக்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசாணை உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.
முதலமைச்சரின் (அரசியல்) பிரிவு சிறப்பு பணியாளர் அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து நேற்று முன்தினம் தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் அரசாணை வெளியிட்டார். சிறப்பு அதிகாரிக்கான பணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தலைமை செயலாளர் கூறி இருந்தார்.
விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் தான் இந்த ரிக்கி ராதன் பண்டிட். இவரை, அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக விஜய் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல ஜோதிடரான இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும், தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் நடந்த விஜய் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்ட திமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது, ‘தமிழக இளைஞர்கள் விஜய்க்கு நம்பிக்கையோடு வாக்களித்துள்ளனர். தமிழக இளைஞர்களை முதல்வர் மதசார்புள்ள ஒரு பாதைக்கு அழைத்து, இளைஞர்களின் வாழ்க்ைகயை கெடுத்து விடக்கூடாது. இது நல்ல முன்னுதாரணம் இல்லை’ என்று கடும் கண்டனம் ெதரிவித்தனர். மேலும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, சட்டப்பேரவை கூட்டம் முடிந்து சில மணி நேரத்தில், தமிழக அரசின் முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் நேற்று மதியம் 1 மணிக்கு வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், ‘ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை தமிழக அரசின் சிறப்பு பணி அதிகாரியாக நியமித்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. அந்த உத்தரவு இன்று ரத்து செய்யப்படுகிறது’, என்று கூறியுள்ளார்.

 

Related Stories: