வேறு காரணங்களுக்காக எம்எல்ஏக்கள் போட்ட கையெழுத்தை எடப்பாடிக்கு ஆதரவு என மோசடி: சி.வி.சண்முகம் பேட்டி

 

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. சட்டப்பேரவையில் இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இரு அணிகளாகப் பிரிந்து வாக்களித்தனர். அதில் 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், 22 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இது தொடர்பாக சி.வி.சண்முகம் சென்னை எம்ஆர்சி நகரில் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தற்போதைய அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள். சிலர் மட்டுமே வேறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளனர். இந்த சூழலில், கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா என்ற பெயரில் யாரும் அங்கீகரிக்கப்படாத நிலையில், ஒருதரப்பிலிருந்து வழங்கப்படும் உத்தரவுகள் செல்லுபடியாகாது. 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, அந்த கடிதத்தில் உறுப்பினர்கள் எப்போது, எங்கே கையெழுத்திட்டார்கள் என்பதை வெளிப்படையாக வெளியிட முடியுமா?

திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளது என டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளது. நான் முதல்வராக இருப்பேன், அமைச்சரவைப் பொறுப்புகளில் பெரும்பகுதி நமக்கே கிடைக்கும் என்ற வகையிலும் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் திருமாவளவன் முதல்வராக இருந்து, அமைச்சரவை பொறுப்புகளை அதிமுக மற்றும் திமுக பகிர்ந்து கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதை தாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருந்தபோதிலும், முதல்வர் என்றால் நான்தான் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இன்னும் சட்டமன்றத்தில் அதிமுகவின் சட்டமன்றத் தலைவர் யார் என்பதே இறுதி செய்யப்படவில்லை. வேறு காரணங்களுக்காக எம்.எல்.ஏக்களிடம் வாங்கிய கையெழுத்தை, எடப்பாடிக்கு ஆதரவு எம்.எல்.ஏக்கள் என மோசடியாக தற்காலிக சபாநாயகர் இருந்தபோது கொடுத்திருக்கிறார்.

அதற்கு எதிராக நாங்களும் 27ம் எம்.எல்.ஏக்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தை கொடுத்திருக்கிறோம். எனவே, இந்த சிக்கலில் இன்னும் சபாநாயகர் தீர்வு காணவில்லை. இந்நிலையில், அவர் எப்படி கொறடாவை நியமிக்க முடியும்? கொறடா என்பவர் தேர்வு செய்யப்படுபவரே தவிர நியமிக்கப்படுபவரல்ல. எனவே நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. சட்டமன்றத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவர் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், கொறடா நியமனம் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் செல்லாது. கொறடா என்பது எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவி. பொதுச்செயலாளர் நேரடியாக நியமிக்கக்கூடிய அதிகாரப் பதவி அல்ல. எங்களை துரோகிகள் என்று விமர்சிப்பவர்கள், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை ஏன் முன்னெடுத்தார்கள்? மேலும் இதுகுறித்து வெளிப்படையாக பேச நான் தயாராக இருக்கிறேன், என்றார்.
தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறோம். இதை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்கிறோம். கட்சியை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எடப்பாடிதான் இப்போது பொதுச்செயலாளார் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சின்னம்மாதான் இவரை முதல்வராக்கினார். ஆனால், சின்னம்மா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ், ஜே.சி.டி பிரபாகரன், செங்கோட்டையன் என ஒவ்வொருவராக கட்சியிலிருந்து வெளியேற்றிக்கொண்டே இருந்தால் கட்சி எப்படி இருக்கும். எனவே, சின்னம்மா, டிடிவி தினகரன் என அனைவரையும் மீண்டும் கட்சிக்குள் இணைத்து ஒருங்கிணைக்க வேண்டும். இருப்பவர்கள் மீது குறைசொல்லி யாரையும் வெளியே அனுப்பாதீர்கள். இனியாவது எல்லோரையும் அரவணைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: