சென்னை: வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களை வளைக்க தவெக தரப்பு ரூ.15 ‘சி’ வரை பேரம் பேசி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு முதலில் பலியானது வேலுமணி. அவருக்கும், அவருக்கு ஆதரவாக வருகிறவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அதை நம்பி அவர் 25 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துள்ளார். அவர்களில் 6 பேருக்கு அமைச்சர் பதவி, 10 பேருக்கு வாரியத் தலைவர் தருவதாக விஜய் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வேலுமணி பின்னால் எம்எல்ஏக்கள் சென்றனர். ஆனால் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் விஜய் அரசை ஆதரிக்க அவர்கள் முன் வந்துள்ளனர். எனினும் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பணம் பேரம் பேசப்பட்டது. தவெகவில் உள்ள ஒரு பெரிய பணக்கார அமைச்சரின் மாமியாரும், எம்எல்ஏவாக உள்ளார். அவர் அதிமுகவில் எதிரணியில் உள்ளார். அவரிடம் பெரிய அளவில் பணம் வாங்கிக் கொண்டுதான் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் மூலம் கட்சியில் சேர்ந்தார். சேர்ந்தவுடன் எம்எல்ஏவும் ஆகிவிட்டார். இப்போது அவர் மருமகனுடன் சேர்ந்து ஆட்சியை காப்பாற்ற பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
முதலில் ரூ.5 ‘சி’ தருவதாக பேசப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ரூ.15 ‘சி’ தருவதாக பேசப்பட்டதால், பல எம்எல்ஏக்கள் அந்தப்பக்கம் தாவினர். இதனால், லாட்டரி பெண்மணியும் ரூ.15 ‘சி’ தருவதாக வாக்குறுதி அளித்தார். அதோடு பணமும் செட்டில் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
அதைத் தொடர்ந்து, கடைசியில் 25 எம்எல்ஏக்கள் வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்தனர். பணம் செட்டில் செய்யப்பட்டதால், அமைச்சர் பதவியை எதிர்பார்த்த வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் கட்சி தலைமையை எதிர்த்து விட்டதால் வேறு வழி இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஆனாலும் விஜய் தூதுவராக பேச வந்த ஒரு தொழிலதிபரிடம் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியே ஆக வேண்டும் என்று வேலுமணி தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றுள்ளதால், ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களை தவெக கண்டுகொள்ளாது என்று கூறப்படுகிறது. இதனால் ஆதரித்து வாக்களித்தவர்கள், பதவி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரிதவிப்பில் உள்ளனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த ஓரிரு நாளிலேயே குதிரை பேரத்தில் குதித்து, நாங்களும் சாதாரண அரசியல்வாதிகள்தான் என்று ஆளும் கட்சியினர் காட்டிவிட்டனர் என்று வாக்களித்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
