பதவிக்காக, அதிகாரத்துக்காக அமைந்த அரசு அல்ல: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற முதல்வர் விஜய் பேச்சு

 

 

 

 

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான அரசினர் தீர்மானத்தில் வெற்றி பெற்ற பின்னர் நன்றி தெரிவித்து பேசியதாவது:
முதலில், நம்பிக்கை தீர்மானத்தில் மக்களுக்கான இந்த ஆட்சியை மனசாட்சி உள்ள மக்களாட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் தனி அணியாக களம் கண்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்கள் வாயிலாக அமைந்த சாமானியர்களின் அரசை போலவே 2026 சட்டமன்ற தேர்தல் வாயிலாக தவெகவும் சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று மக்களிடம் தீர்மானமாக கூறினோம். மக்களும் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்.
கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளுக்குள் 34.92 சதவிகிதத்துடன் ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 208 வாக்குகளை மக்கள் தந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். ஒரு நூலிழையில் தனிப்பெரும்பான்மை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது. அதனால், இந்த அரசை சிறுபான்மை அரசு போல யாரும் நினைத்தால், அதிலும் எங்களுக்கு மகிழ்ச்சியே. இது சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசுதான்.

அதுமட்டுமல்ல, பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் என அனைத்து மக்களுக்குமாக இந்த அரசு அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டதால்தான் இந்த நம்பிக்கை தீர்மானத்தில் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில், இந்த மாமன்றத்தில், நமது அரசு சார்பாக சில உத்தரவாதங்களை நான் தர வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களான பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் இந்த மக்கள் அரசு மனசாட்சி உள்ள மக்களாட்சியை தரும் என்று உறுதி அளிக்கிறேன். சமூக நீதி, சம நீதி, சம வாய்ப்புடன் உண்மையான உறுதியான ஜனநாயகத்துடன் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகளுடன் இந்த அரசு நடக்கும். அதில் சிறிதும் மாற்றமில்லை. நம்முடைய இந்த ஆழமான நம்பிக்கையை மனதார நம்பி வாக்களித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும், அந்த இயக்கங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எம்மதமும் நம் மதமே. எல்லா மக்களும் நம் மக்களே. இதில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடே இருக்காது. இது சாதி, மத எல்லைகளை கடந்த அரசு. அரசியல் காரணங்களுக்காக யாரையும், எதற்காகவும் புண்படுத்தாத அரசு. இது பதவிக்காக, அதிகாரத்துக்காக அமைந்த அரசு அல்ல. நம்பிய மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அமைந்த அரசு. மக்கள் நலன் மட்டுமே முக்கியம். அதுவே எங்கள் ஒரே நிலைப்பாடு. இவ்வாறு அவர் பேசினார்.

 

Related Stories: