சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவன் கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, சாதியின் பெயரை சொல்லி திட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்து கொண்டாடியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருட்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
