புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பதவியேற்பு: புதிய அமைச்சர்கள் பட்டியலை கவர்னரிடம் வழங்கினார்

 

புதுச்சேரி: புதுவையில் நடந்த சட்டமன்ற தேர்தலில், தேஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ் 12, பாஜ 4, அதிமுக, எல்ஜேகே தலா ஒரு இடம் என மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதை தொடர்ந்து நடந்த தேஜ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தேஜ கூட்டணி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ, எல்ஜேகே, அதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு கடிதத்தையும் ரங்கசாமியிடம் வழங்கினர். இதையடுத்து அவர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், முதல்வர் ரங்கசாமியை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து நாளை (13ம் தேதி) காலை 9.47 மணிக்கு 5வது முறையாக ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதற்கான விழா கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ளது. ஆரம்பத்தில் 4 தொகுதிகளில் வென்ற பாஜவுக்கு ஒரு அமைச்சர், துணை சபாநாயகர் பதவிகளை மட்டுமே வழங்க ரங்கசாமி முன்வந்தார். இது பாஜவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த முறைப்போலவே இரண்டு அமைச்சர்கள், ஒரு சபாநாயகர் வழங்க பாஜவினர் வலியுறுத்தினர். இதனை ஆரம்பத்தில் ரங்கசாமி ஏற்றுக்கொளவில்லை. தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா, ரங்கசாமியிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். தேஜ கூட்டணிக்கு மக்கள் விரும்பி வாக்களித்துள்ளனர். எனவே இந்த ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும். இலாகா உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனையேற்று முதல்கட்டமாக 2 அமைச்சர் பதவிகளை வழங்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். கூடுதலாக சபாநாயகர் பதவியை பாஜ வலியுறுத்தி வருகிறது. ஜான்குமாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.

இது போன்ற சூழலில் முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை 5.50 மணியளவில், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அமைச்சரவை உத்தேச பட்டியலை வழங்கியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், வெளியே வந்த ரங்கசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, எந்த பதிலையும் தெரிவிக்காமல் புறப்பட்டு சென்றார். முதல்வர் ரங்கசாமி வழங்கியுள்ள பட்டியலில் பாஜ சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், ஜிஎன்.எஸ் ராஜசேகரன், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, நாராயணசாமி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவர்னர் மாளிகையில் முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கான மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

 

Related Stories: