திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் தகராறு சலூன் கடைக்காரர் கொலை: உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலையாளியை உடனே கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் அடுத்த வண்டாம்பாளையத்தில் மகா சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பக்தர்கள் காவடி எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. வண்டாம்பாளையத்தை சேர்ந்த பாரதிமோகன் மகன் மோகன்தாஸ்(22). கூலி தொழிலாளி. எட்டியலூரை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்(23). இவர் திருவாஞ்சியத்தில் சலூன் கடை வைத்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் கோயில் திருவிழாவிற்கு சென்று இருந்தனர். அப்போது கூட்டத்தில் முந்தி செல்வது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்து சந்தோஷை, மோகன்தாஸ் ஆக்ரோஷமாக கீழே தள்ளி விட்டார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வந்தது. இதையடுத்து அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே சந்ேதாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் கொலை வழக்குப்பதிந்து மோகன்தாஸை கைது செய்தனர்.

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய வண்டாம்பாளையத்தை சேர்ந்த கணேஷ் (22) என்பவரை கைது செய்ய கோரியும் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவருக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. மறியல் காரணமாக திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கணேஷை கைது செய்தனர்.

Related Stories: