வைகோ, அன்புமணி, சீமானிடமும் வாழ்த்து பெற்றார் விஜய்

 

 

சென்னை: முதல்வர் விஜய் வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார். தமிழக முதல்வர் விஜய் நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திப்பதற்காக சென்றார். அங்கு வைகோ இல்லத்திற்கு வந்த விஜய்யை, வைகோவின் மகனும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கு வைகோவை விஜய் சந்தித்தார். அப்போது விஜய், வைகோவின் கைகளைப் பற்றிக்கொண்டு, அவரது உடல்நலம் குறித்து மிகவும் அக்கறையுடன் விசாரித்தாார். தொடர்ந்து வைகோவுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு வைகோவும் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். வீட்டிற்கு வந்த விஜய்யிடம், வைகோ தனது குடும்பத்தாரையும், வீட்டில் உள்ள அனைவரையும் அறிமுகப்படுத்தினார். அவர்களுடன் முதல்வர் விஜய் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதனையடுத்து முதல்வர் விஜய்யும், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார்.

பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். தொடர்ந்து விஜய்யின் கார் வரை வந்து அவரை வைகோ வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து வைகோ அளித்த பேட்டியில், ‘‘விஜய்யின் பண்பாடு என்னை வியக்க வைத்தது. ‘உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்’ என்று விஜய் என்னிடம் கூறினார். விஜய்க்கு அறிவுரை அல்ல, வாழ்த்து கூறினேன். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கான அடையாளம் தான் இந்த தேர்தல் முடிவு. மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாப்பேன் என்ற உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அதற்கு வாழ்த்துகள். அதை அப்படியே தொடருங்கள் என்று கூறினேன்’’ என்றார். மதிமுக முதன்ைம செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டியில், ‘‘மாநில வளர்ச்சிக்கு தேவையாக நடவடிக்கைகளை விஜய் எடுக்க வேண்டும். ஊழல் அற்ற அரசாங்கமாக விஜய் உடைய அரசு இருக்கும் என கூறியிருந்தார். அதனை ஆட்சிக்கு வந்த பிறகு செய்துகாட்ட வேண்டும். இளம் தலைமுறைக்கு பெரியார், அண்ணா குறித்து தெரியாது, ஆனால் விஜய் மூலம் அவர்கள் அதை தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை அண்ணாவும், பெரியாரும் முன்வைத்தனர். அதையே விஜய்யும் தனது ஆட்சியில் கடைபிடித்தால் அது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

தொடர்ந்து விஜய் அக்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி வீட்டிற்கு நேரில் சென்றார். முதல்வரை அன்புமணியும், அவரது மனைவி சவுமியா அன்புமணியும் வாசலுக்கே நேரில் சென்று வரவேற்றனர்.
பின்னர், அன்புமணியிடம் விஜய் வாழ்த்து பெற்றார். பின்னர், அன்புமணி ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அன்புமணியின் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு முதல்வர் விஜய் வந்தார். அவரை வீட்டு வாசலில் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து வீட்டிற்குள் சீமான் அழைத்து சென்றார். தொடர்ந்து விஜய், சீமானுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். பதிலுக்கு சீமானும் சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும், பழக்கூடையை அளித்தும் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தனது குடும்பத்தில் உள்ளவர்களை விஜய்யிடம் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

 

Related Stories: