சென்ன: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டித் தொகை மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30வது புத்தகக் கண்காட்சியை 2007ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ.4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.
2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
